சிவகங்கை நகராட்சியில் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு: பொதுமக்கள் அவதி

சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் மழை நீரோடு செல்வதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை நகராட்சியில் 27வார்டுகள் உள்ளன. சுமார் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ரூ.23.5 கோடியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 2007 மார்ச்சில் தொடங்கப்பட்டன. 13 ஆண்டுகளாகியும் திட்டம் முடிவடையாமல் உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே கழிவு நீர் செல்லும் வகையில் உள்ள கால்வாய்கள் அனைத்து இடங்களிலும் இருந்தன.

சில இடங்களில் 10அடி அகலம் வரையில் இருந்த இக்கால்வாய்கள் அருகிலுள்ள தனியாரின் ஆக்கிரமிப்புகளால் தற்போது மிகச்சிறிய அளவிலான கால்வாய்களாக காட்சியளிக்கின்றன. பல இடங்களில் கால்வாய்களே இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. கழிவு நீர், மழை நீர் சென்று வந்த கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு மற்றும் அடைபட்டு போயுள்ளதால் நகர் முழுவதும் பல இடங்களில் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. தெப்பக்குளம் அருகில், பஸ் ஸ்டாண்ட் பின்புறம், ஆவரங்காடு பகுதி, உழவர் சந்தை பின்புறம், சி.பி.காலனி, நேருபஜார் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் இப்பிரச்சினை உள்ளது.

இது போல் ஏராளமான குப்பைகள் கால்வாய்க்குள் கிடக்கின்றன. இக்கால்வாயில் அள்ளப்படாத குப்பைகள் மற்றும் பாலித்தீன் பைகளும் தேங்கியிருப்பதால் கழிவு நீர் முற்றிலும் செல்ல முடியாத நிலையில் துர் நாற்றம் வீசுகிறது. இதனால் லேசான மழை பெய்தாலே மழை நீரும், கழிவு நீரும் சேர்ந்து சாலைகளில் செல்கின்றன. ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் கால்வாய்களை மீட்கவும், கால்வாய்களை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் கூறுகையில்,‘‘கழிவு நீர் செல்ல வழியில்லாத நிலையில் லேசான மழை பெய்தாலே சாலைகளில் மழை நீரோடு, கழிவு நீரும் சேர்ந்து செல்கிறது.

இவ்வாறு நீர் சென்ற பிறகு கழிவுகள், குப்பைகள் சாலைகள், கடைகளின் முன் தேங்கி நிற்கிறது. இவற்றை அகற்றுவது பெரிய சவாலாக உள்ளது. இதனால் கடும் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’என்றனர்.

Related Stories: