இலவச மின்சாரம் ரத்தா? 22 லட்சம் விவசாய மின் இணைப்பு கேள்விக்குறி டெல்டா மாவட்டங்களுக்கு மேலும் ஒரு அடி

* போராட்டம் வெடிக்கும் என்று விவசாயிகள் எச்சரிக்கை

தஞ்சை: மத்திய அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்ய போவதாக வந்துள்ள தகவல் விவசாயிகளின் தலையில் இடி விழுந்ததுபோல் உள்ளது. இதனால் 22 லட்சம் விவசாயிகள் மின் இணைப்பு நிலை கேள்விக்குறியாகிவிடும். இதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று தமிழக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குடகுமலையில் தலைக்காவிரியில் உற்பத்தியாகும் காவிரியாறு ஒகேனக்கல் வழியாக தமிழகத்துக்குள் நுழைகிறது. கர்நாடகத்தில் பாயும் காவிரியின் நீளம் 320 கிலோ மீட்டராகும். தமிழகத்தில் காவிரி ஆறு பாயும் நீளம் 416 கிலோ மீட்டராகும். மைசூர் பகுதி காவிரி நீரை கடந்த 19ம் நூற்றாண்டின் இறுதி வரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தது. 1892ல் மைசூரில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இதை சமாளிக்க முடியாமல் மைசூர் அரசு திணறியபோது காவிரி நீரை பயன்படுத்தி தீர்வு காண முயற்சித்தது. காவிரி நீரை கர்நாடகம் 120 ஆண்டுகளாக விவசாயத்துக்கு பயன்படுத்தியது என்றால் தமிழகமோ 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறது. 1892க்கு முன் காவிரி தடையின்றி பாய்ந்ததால் தமிழகம் செழித்தது. ஆனால் அதன்பின்னர், காவிரி நீரை வேளாண்மைக்கு பயன்படுத்த துவங்கிய கர்நாடக அரசு, தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பு தெரிவிக்க தொடங்கியது.

1928ம் ஆண்டு கணக்கீட்டின்படி தமிழகத்தில் 14.44 லட்சம் ஏக்கராகவும், கர்நாடகத்தில் 1.11 லட்சம் ஏக்கராகவும் பாசன பரப்பு இருந்தது. 1956ம் ஆண்டு கணக்கீட்டின்படி தமிழகத்தில் சாகுபடி பரப்பு 22.77 லட்சம் ஏக்கராகவும், கர்நாடகத்தில் 4.93 லட்சம் ஏக்கராகவும் இருந்தது. காவிரி நீரை கொண்டு சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பின் அளவு கர்நாடகத்தில் பலமடங்கு தற்போது உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் தற்போது 22 லட்சம் எக்டேர் நிலமும், தமிழகத்தில் 17 லட்சம் எக்டேர் நிலமும் காவிரியால் பாசன வசதி பெறுகின்றன. தொடக்கத்தில் இருந்தே தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கொடுக்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது. தமிழக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி வழக்கமாக மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும். ஜனவரி 28ம் தேதி மூடப்படும். ஆனால் கர்நாடகாவின் பிடிவாத போக்கால் போதிய நீர் கிடைக்காமல் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதால் வழக்கமான காலத்தில் அணை திறக்கப்படுவதில்லை.

இதனால் தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி டெல்டா மாவட்ட விவசாயிகள் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் ஆண்டுக்காண்டு மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் சாகுபடி பரப்பும் குறைந்து வருகிறது. ஓரளவு பெரிய விவசாயிகள் நிலத்தடி நீர் மூலம் தண்ணீர் எடுத்து நிலைமையை சமாளித்து வருகின்றனர். சிறு, குறு விவசாயிகளும் வட்டிக்கு கடன் வாங்கி போர்வெல் அமைத்து சாகுபடி செய்து வருகின்றனர். அதுவும் அரசின் இலவச மின்சாரத்தை நம்பியே போர்வெல் அமைக்கின்றனர். இதற்கு தற்போது 12 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது சாகுபடிக்கு போதாது எனவும், மும்முனை மின்சாரம் வழங்கும் நேரத்தை குறைந்தபட்சம் 20 மணி நேரமாக உயர்த்த வேண்டும் எனவும் நீண்ட காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்ய போவதாக வந்துள்ள தகவல் விவசாயிகளின் தலையில் இடி விழுந்தது போல் உள்ளது. மின் பகிர்மானம், கட்டணம், மின் உற்பத்தி என நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்கை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது. நாட்டுக்கான உணவு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மின் மானியம் வழங்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் மேலும் மேலும் விவசாயிகள் மீது சுமைகளை அரசு சுமத்துவது உணவு உற்பத்தியை கடுமையாக பாதிக்கும். தற்போது தமிழகம் முழுவதும் 22 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. இதில் டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் இணைப்புகள் உள்ளன. ஆனால் 12 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் 24 மணி நேரமும் எந்தவித கட்டணமின்றி விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முதன்முதலாக கடந்த 1984ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் 1990ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வர் கருணாநிதி, பெரு விவசாயிகளுக்கும் அதாவது அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சார திட்டத்தை அறிவித்தார். ஆனால் எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் விவசாயிகளுக்காக கொண்டு வந்த இந்த இலவச மின்சார திட்டத்திற்கு சமாதி கட்டும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை எப்படி எடப்பாடி அரசு சமாளித்து விவசாயிகளை காக்க போகிறது என்பது தான் கேள்விகுறியாக உள்ளது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் கூறியதாவது: கடந்த காலங்களில் விவசாயத்துக்கான மின் கட்டணத்தை வெறும் 2 காசு உயர்த்தியதற்கே போராட்டத்தில் ஈடுபட்டு 39 விவசாயிகள் வீர மரணத்தை தழுவினர். அவர்கள் சிந்திய ரத்தத்தால் கிடைத்தது தான் மின் மானியம். உதய் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்தார். அவரது வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் எடப்பாடி அரசு, உதய் திட்டத்தை முதலில் ஆதரிப்பதாக மத்திய அரசிடம் வாக்குறுதி கொடுத்து விட்டு தற்போது எதிர்ப்பதாக கடிதம் எழுதுவது விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும்.

ஆனால் கேரளா, தெலங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமிழகத்தில் 20 ஆண்டுகளாக வேளாண் மின் இணைப்பு வேண்டி 4.25 லட்சம் பேர் விண்ணப்பித்து காத்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட போர்வெல் எல்லாம் தூர்ந்துபோய்விட்டது. தற்போது மின் இணைப்பு கொடுக்கும்பட்சத்தில் இந்த போர்வெல்களை சரி செய்வதற்கு பல லட்சத்தை விவசாயிகள் செலவிட வேண்டிய நிலை உள்ளது. சமீபத்தில் சட்டமன்றத்தில் 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்ற மின்துறை அமைச்சரின் அறிவிப்புக்கு இதுவரை ஆணைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் மேலும் விவசாய மின் இணைப்புக்கான கட்டணத்தை அமல்படுத்தினால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். உணவு உற்பத்தி சரியும். இதன் தாக்கம் சில ஆண்டுகளிலேயே காண முடியும். இத்திட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: