கந்தன் பூமி கனமழையால் குளிர்ந்தது

பழநி: பழநியில் நேற்று பெய்த கனமழையால் மலைக்கோயில் படிக்கட்டில் தண்ணீர் அருவி போலஓடியது.  திண்டுக்கல் மாவட்டம், பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. நேற்று பிற்பகல் 3 மணிக்கு பழநி நகரில் மழை பெய்ய துவங்கியது. சாரலாக ஆரம்பித்த மழை படிப்படியாக வெளுத்து வாங்க துவங்கியது. இதனால் பழநி நகரில் உள்ள சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன. இந்திரா நகர், கவுண்டன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் சாக்கடை நீர் புகுந்தது. கொட்டித்தீர்த்த மழையால் மலைக்கோயில் படிப்பாதையில் தண்ணீர் அருவிபோல் பாய்ந்தோடியது.

மேற்கு தொடர்ச்சி மலையிலும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் பழநியின் குடிநீர் மற்றும் விவசாய ஆதாரமான பாலாறு-பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்படும் சூழ்நிலை உண்டாகி உள்ளது. எனவே விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாலசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் கனமழையின் காரணமாக மின்விநியோகம் தடைபட்டது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. சூறைக்காற்று வீசியதால் வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. நேற்றிரவு வரை பழநியின் பல இடங்களில் மின்விநியோகம் சீராகவில்லை. திடீர் மழை காரணமாக பழநி நகரில் வீசி வந்த அனல்காற்று நீங்கி குளிர்காற்று வீசியது.

Related Stories: