புதுவையிலிருந்து காரைக்காலுக்கு பிஆர்டிசி பேருந்து இயக்கம்: 33 பயணிகள் வரை செல்ல அனுமதி

புதுச்சேரி: நாடு முழுவதும் கொரோனா தேசிய ஊரடங்கு காரணமாக புதுச்சேரியில் கடந்த  56 நாட்களாக பொது போக்குவரத்து சேவை முடக்கப்பட்டிருந்தன. இதையடுத்து  பிஆர்டிசி உள்ளூர் பஸ்களை இயக்க அரசு அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று  முன்தினம் நகர, கிராமப்புற பகுதிகளுக்கான டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. கோரிமேடு,  நல்லவாடு, கொம்பாக்கம், வில்லியனூர், கீழ்அக்ரகாரம், பத்துக்கண்ணு  உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. டிக்கெட் கட்டணம் எதுவும்  ஏற்றப்படாத நிலையில் குறைந்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் இதற்கான  டீசல் செலவினம் அதிகமானது. இருப்பினும் பொதுசேவை என்பதால் நஷ்டத்திலும்  பிஆர்டிசி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் புதுச்சேரியில்  இருந்து காரைக்காலுக்கு இடைநில்லா பேருந்தை இயக்க அமைச்சரவை நடவடிக்கை  மேற்கொண்டது. இதன் எதிரொலியாக நேற்று காலை 6 மணியளவில் புதுச்சேரியில்  இருந்து காரைக்காலுக்கு பிஆர்டிசி பஸ் புறப்பட்டு சென்றது. 57 இருக்கைகள்  கொண்ட இந்த பஸ்சில் சமூக இடைவெளியை கடைபிடித்து 33 பயணிகள் வரை மட்டுமே  அமரவைத்து இயக்கப்பட்டது. இதற்கான கட்டணமாக ஏற்கனவே உள்ள ரூ.110 மட்டுமே  பெறப்பட்டது.  உதவி மேலாளர்கள் புஷ்பராஜ், சிவானந்தம், குழந்தைவேலு  மற்றும் பிஆர்டிசி தொழிற்சங்க நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகள் இப்பேருந்தை  வழியனுப்பி வைத்தனர்.

இதற்காக பஸ் நிறுத்துமிடத்தில் காவல்துறையால்  நிழற்கூரை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு இருக்கைகள் போடப்பட்டு அடுத்த பஸ் வரும்வரையில் பயணிகள் அனைவரும் சமூக இடைவெளி விட்டு  அமர க்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பல்வேறு  அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தனர். ஆனாலும் 2வது பஸ் புறப்படுவதற்கு  தேவையான எண்ணிக்கையில் பயணிகள் வரவில்லை. 10 பேர் மட்டுமே இருந்ததால்  அவர்களை நாளை வருமாறு கூறி அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இதனால் ஒரு பஸ்  மட்டுமே புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு இயக்கப்பட்டது. இதேபோல்  காரைக்காலில் இருந்தும் அதே நேரத்தில் புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.  புதுச்சேரியில் இருந்து செல்லும் பயணிகள் குறைவாக இருப்பின் இடைநில்லா  ேபருந்து என்பதால் பஸ் சேவை எண்ணிக்கையை குறைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: