ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் நாடு முழுவதும் 2 தினங்களில் கவுன்டர்களில் டிக்கெட் முன்பதிவு: இன்று முதல் 1.7 லட்சம் பொதுசேவை மையங்களில் விற்பனை

புதுடெல்லி: இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் நாடு முழுவதும் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் முன்பதிவு தொடங்கும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பாஜ செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ராவுடன் செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள ரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் முன்பதிவு தொடங்கப்பட உள்ளது. எந்தெந்த நிலையங்களில் முன்பதிவு டிக்கெட் வழங்க அனுமதிப்பது என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இணையதளம் மற்றும் கம்ப்யூட்டர் வசதி இல்லாத கிராம‍ப் புறங்களில் உள்ளவர்களுக்கும் முன்பதிவு சேவை கிடைக்கும் வகையில், நாடு முழுவதும் 1.7 லட்சம் பொதுசேவை மையங்கள் மூலம் அவர்களுக்கும் முன்பதிவு டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் ஜூன் 1ம் தேதி முதல் 5 துராந்தோ, 17 ஜன்சதாப்தி, சம்பர்க் கிராந்தி உள்பட 100 ரயில்கள் இயக்கப்படும் என்று நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியான இரண்டு மணி நேரத்தில் 1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 லட்சத்து 90 ஆயிரத்து 510 பேர் பயணிக்க உள்ளனர்.

ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புகள் கொண்ட இந்த ரயில்களில் அனைத்தும் பெட்டிகளுமே முன்பதிவு செய்யப்பட்டதாக மட்டுமே இருக்கும். இந்த ரயில்கள் மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு மட்டும் அல்லாமல் இரண்டாம் கட்ட நகரங்களையும் சென்றடையும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: