வெட்டிவிடுவோம்... ஆனா... தலைமுடிய எடுத்துட்டு போயிடணும்: கேரள சலூன், அழகு நிலைய கூட்டமைப்பு அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் சலூன் கடைகளில் வெட்டிய முடியை வாடிக்கையாளர்களே எடுத்து செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா  முழுவதும் லாக்-டவுன் காரணமாக சலூன் கடைகள், அழகு நிலையங்கள் கடந்த  2  மாதங்களாக மூடப்பட்டிருந்தன. சவரக்கத்தி, கத்தரி, டவல்   போன்றவற்றை பலருக்கும் பயன்படுத்துவது மற்றும் மிக நெருக்கமாக இருப்பது   போன்ற செயல்களால் கொரோனா எளிதில் பரவ வாய்ப்பு உள்ளதால் இந்த கடைகளை திறக்க   தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நோய்   தீவிரம் குறைந்த பகுதிகளில் நிபந்தனைகளுடன் சலூன் மற்றும் அழகு  நிலையங்கள்  திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் நேற்று முதல் சலூன்  மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்பட்டன.

சலூன்  கடைகளில் முடி  வெட்டவும், ேஷவிங் செய்யவும் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. 2  பேருக்கு மேல்  காத்திருக்கக்கூடாது எனவும், ஒருவருக்கு பயன்படுத்திய டவலை அடுத்தவருக்கு  பயன்படுத்தக்கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த   நிலையில் கேரள சலூன் மற்றும் அழகு நிலைய கூட்டமைப்பு தலைவர் மோகனன்  மற்றும்  செயலாளர் கொல்லத்தில் கூறியதாவது: முடி வெட்ட வருபவர்கள் வீட்டில் இருந்து சுத்தமான துணி  மற்றும் டவல்  கொண்டு வர வேண்டும். வெட்டப்பட்ட முடியை  வாடிக்கையாளர்களே  எடுத்து செல்ல வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க  வேண்டும். காய்ச்சல்,  இருமல், ஜலதோஷம் உட்பட நோய் அறிகுறிகள்  உள்ளவர்கள் கடையில் அனுமதிக்கப்பட  மாட்டார்கள். அறிமுகம் இல்லாதவர்களும்  கடைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  வாடிக்கையாளர்கள் தூய்மையை  கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: