10, 12ம் வகுப்புக்கு தேர்வு நடத்தலாம்: மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: ஊரடங்கில் இருந்து 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வுகளுக்கு விலக்கு அளித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.    இது தொடார்பாக டிவிட்டரில் நேற்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், `பெரும்பாலான மாணவர்களின் விருப்பத்தின்படி ஊரடங்கில் இருந்து 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை நடத்த விலக்கு அளிக்கப்படுகிறது. மாணவர்கள் பாதுகாப்புக்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. தேர்வு மையத்தில் சமூக இடைெவளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் போன்றவை கட்டாயமாக்கப்படுகிறது, என குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சில கட்டுப்பாடுகளுடன் நாடு முழுவதும் 10, 12ம் வகுப்பு தேர்வுகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களை கொரோனா கட்டுப்பாட்டு பகுதிக்குள் அமைக்க கூடாது. மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வெப்பநிலை சோதனை நடத்துவது, சானிடைசர் வழங்குவது ஆகியவற்றை தேர்வு மையத்தில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுவதும் முக்கியம். தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் சென்று வர வசதியாக மாநில அரசுகள் அல்லது யூனியன் பிரதேசங்கள் பஸ் வசதி செய்து தர வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: