மலேரியாவுக்கான மருந்தை எடுத்துக் கொள்வதால் பருத்த உடலமைப்பை கொண்ட அதிபர் டிரம்ப்பின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் :சபாநாயகர் நான்சி பெலோசி

வாஷிங்டன் : பருத்த உடலமைப்பை கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மலேரியாவுக்கான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொள்வதால் அவர் உயிருக்கு சிக்கல் ஏற்படலாம் என சபாநாயகர் நான்சி பெலோசி கூறி உள்ளார். மலேரியாவிற்கு எதிரான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பயன்படுத்தலாம் என கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனால், இந்த மருந்து குறித்த ஆராய்ச்சியில், உண்மையில் கொரோனாவை முற்றிலும் குணமாக்கும் என்பது இதுவரையில் நிரூபணம் ஆகவில்லை. மேலும், இதை முறையின்றி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என உலக நாடுகளும், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஒழுங்காற்று துறையும் எச்சரிக்கை விடுத்தன. ஆனால் கடந்த ஒன்றரை வாரமாக தினமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை தாம் எடுத்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் எதிரியாக கருதப்படும் சபாநாயகர் நான்சி பெலோசி கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கனவே பருத்த உடலமைப்பை கொண்ட டொனால்டு டிரம்ப் தற்போது அந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் அவர் உயிருக்கு ஆபத்து  ஏற்படலாம் என நான்சி கவலை தெரிவித்துள்ளார்.சி.என்.என் செய்தி நிறுவனத்திற்கு நான்சி அளித்த பேட்டியில், அவர் நமது ஜனாதிபதி, விஞ்ஞானிகளால் இதுவரை அங்கீகரிக்கப்படாத மருந்தை தற்காப்புக்காக அவர் எடுக்க மாட்டார் என்று நான் விரும்புகிறேன் என்றார். குறிப்பாக அவரது வயதுடையவர்கள், அதுவும் பருத்த உடல் அமைப்பை கொண்ட அவர் குறித்த மருந்தை உட்கொள்வது ஒரு நல்ல யோசனை அல்ல என்று நான் நினைக்கிறேன் என்றார்.

Related Stories: