சீனாவின் மர்மம் பற்றி 30 நாளில் விசாரணை நடத்தாவிட்டால் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா முழுமையாக விலகும்: டிரம்ப் கடும் எச்சரிக்கை

வாஷிங்டன்: சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய மர்மம் குறித்து 30 நாட்களில் சுதந்திரமான விசாரணையை நடத்தாவிட்டால் உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதுடன், அமெரிக்கா வழங்கும் நிதி முழுமையாக முடக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.  கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா சரியான நேரத்தில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை என்றும், சரியான முறையில் பிரச்னையை கையாளவில்லை என்றும் உலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனிடையே உலக சுகாதார அமைப்பானது சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், அதன் கைப்பாவையாக செயல்படுவதாகவும் அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

மேலும், சுகாதார அமைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கி வந்த 50 கோடி டாலர் நிதியை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாகவும் அறிவித்தார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியசுக்கு அதிபர் டிரம்ப் 4 பக்கம் அளவிலான கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: நீங்களும் உங்கள் அமைப்பும் சரியாக செயல்படாத காரணத்தால் உலகமானது மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகின்றது. இதற்கான ஒரே வழி சீனாவிடம் இருந்து விலகி சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

இதற்காக சுகாதார அமைப்பில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் குறித்து ஏற்கனவே ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பான உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் நேரத்தை வீணடிப்பதற்கு விரும்பவில்லை. உலக சுகாதார அமைப்பானது அடுத்த 30 நாட்களில் சீனாவிடம் இருந்து விலகி கொரோனா வைரஸ் தொற்று விவகாரம் குறித்து சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும். இல்லையென்றால் சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதி நிரந்தரமாக முடக்கப்படுவதோடு,  அமைப்பில் உறுப்பினராக இருப்பதில் இருந்து அமெரிக்கா வெளியேறும். இவ்வாறு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பு சம்மதம்

கொரோனா வைரஸ் எப்படி தொடங்கியது மற்றும் பரவியது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உலக சுகாதார கூட்டத்தில் ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்பட 116 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 194 உறுப்பினர்கள் உள்ள நிலையில், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவையாகும். முதலில் சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், உலக நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக ஒப்புக்கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளும் தங்கள்  கருத்துக்களை தெரிவித்த பின்னர் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரஸ், உலக நாடுகளின் கோரிக்கைக்கிணங்க பாரபட்சமற்ற ஆய்வு மற்றும் விசாரணை நடத்தப்படும் என்றார்.

Related Stories: