மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி வருவாய் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை சமாளிக்க உதவும்: 5ம் கட்ட அறிவிப்பு குறித்து ஜி.கே.வாசன் நம்பிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்க மத்திய நிதி அமைச்சர் 5ம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக நிலம், பணப்புழக்கம், தொழிலாளர் நலன், கல்வி, மருத்துவம், 100 நாள் வேலை வாய்ப்பு, பொதுத்துறை சார்ந்த 7 அறிவிப்புகளில் உள்ள முதலீடும், திட்டங்களும்பயன் தரும்.

 சிறு குறு தொழில் துறைக்கான சிறப்பு திவால் சட்டம் உருவாக்கப்படுவதும், தொழில் செய்ய ஏதுவாக தொழில் துறைக்கான விதிமுறைகள் எளிமையாக்கப்படுவதும், பொதுத்துறை நிறுவனக் கொள்கையில் காலத்துக்கேற்ப மாற்றங்கள் செய்யப்படுவதும், தொழில்கள், தொழிலாளர்கள், நிறுவனங்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைய வழி வகுக்கும்.

 மாநில அரசுகளுக்கான கடன் வரம்பு 3 சதவீதமாக இருந்த நிலையில் 5 சதவீதமாக ஆக உயர்வதற்கு அறிவிப்பு வெளியாகியிருப்பதால் அனைத்து மாநில அரசுகளும் கூடுதல் கடன் பெறும்போது மக்கள் பயனடைவார்கள். மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதன் மூலம் வருவாய் பங்கீட்டில் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் சமாளிக்கப்பட்டு, மாநில அரசுகள் மக்களுக்கு உதவிடுவதற்கு ஏதுவாக இருக்கும். எனவே சுயசார்பு இந்தியா திட்டத்திற்கான பொருளாதார உதவி தொகுப்பு குறித்த விவரங்களில் 5ம் கட்டமாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்புகளால் வருங்கால இந்தியா பொருளாதாரத்தில் மேம்படும் என்ற நம்பிக்கையை அளித்திருக்கிறது.

Related Stories: