பரிசோதனை செய்யாமல் கொரோனா பரவல் இல்லை என்பது தமிழகத்தை பேராபத்தில் தள்ளிவிடும்: அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

* கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களைச் சீக்கிரமாகக் கண்டறிந்துவிட்டால் இறப்பைத்தடுத்துவிடலாம்.

சென்னை: பரிசோதனையை முழுவதுமாக செய்யாமல் கொரோனா பரவல் இல்லை என்று கூறுவது தமிழகத்தை பேராபத்தில் தள்ளிவிடும் என்று அரசை என்று மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைகளைக் குறைத்துக் கொள்வதன் மூலமாக, நோய்த் தொற்று குறைந்து வருகிறது அல்லது நோய்த்தொற்றே இல்லை என்று போலியாக வெளி உலகத்திற்குக் காட்ட நினைக்கிறது தமிழக அரசு. தமிழகத்தில் மே 7ம் தேதி 14,102 என்ற அளவில் இருந்த பரிசோதனைகளின் அளவானது, படிப்படியாகக் குறைக்கப்பட்டு 16ம்தேதி(நேற்று முன்தினம்) தகவலின்படி,  8,270 எனக் குறைந்துள்ளது. பரிசோதனை செய்யும் அளவை அரசு கிட்டத்தட்ட 40 சதவிகிதம் குறைத்துள்ளது.

அதனால் நோய்த் தொற்று எண்ணிக்கையும் குறைந்து வருவதாகக் காட்டுகிறார்கள். பரிசோதனைகளைப் பரவலாக அதிகப்படுத்திய பிறகும், நோய்த் தொற்று இல்லை என்று நிரூபிப்பதுதான் நேர்மையான அரசாங்கத்தின் நெறியாக இருக்க முடியுமே தவிர,  பரிசோதனையே செய்யாமல் நோயே இல்லை என்று காட்ட முயற்சி செய்வது, விபரீதத்தையே விளைவிக்கும். கொரோனா தொற்றுப் பரவல் குறித்த அச்சம் சிறிதும் குறையாத ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் எதற்கு என்று பொதுமக்களும், குறிப்பாகப் பெண்களும் வாட்ஸ்அப்பில் அனுப்பி வைக்கும் வீடியோ பதிவுகளைப் பார்த்தப் பிறகும் முதல்வருக்கு விழிப்புணர்ச்சி ஏற்படவில்லை. பரிசோதனைகளை அதிகமாக நடத்தியதால்தான் தொற்று உறுதியானவர் எண்ணிக்கையும் அதிகமாகத் தெரியவந்தது. கடந்த சில நாட்களாகப் பரிசோதனையைக் குறைத்து, தொற்று உறுதியானவர் எண்ணிக்கையையும் குறைத்துக் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழக அரசு அறிவித்த சிறப்பு மருத்துவக் நிபுணர் குழு அளித்த பேட்டியில், தமிழகத்தில் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த பரிசோதனையைக் குறைக்கவே கூடாது. ஆனால் கூட்டலாம் என்று அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறோம். அதிகச் சோதனைகளால்தான் தொற்றுப் பரவலைக் கண்டறியமுடியும். தொற்று அதிகமாக இருப்பதினால் பயப்படக்கூடாது. ஆனால் எங்கே அதிகமாக இருக்கிறது என்பதைக் கவனித்து அங்கே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை முடிவு செய்ய வேண்டும். கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களைச் சீக்கிரமாகக் கண்டறிந்துவிட்டால் இறப்பைத் தடுத்துவிடலாம்.

சில நேரங்களில் தொற்று அதிக அளவில் அலையாக எழும், சில நேரங்களில் குறைவாக எழும். அதிகம் பரவும் நேரங்களில் இந்த நடைமுறைகளைப் பின்பற்றினால் பரவாமல் கட்டுப்படுத்திவிடலாம் என்று அந்த நிபுணர்கள் சொல்லி இருக்கிறார்கள், இதனை அரசுக்குச் சொன்னதாகவும் சொல்லி இருக்கிறார்கள். இவ்வளவு தெளிவாக அவர்கள் சொன்னதற்குப் பிறகும், பரிசோதனைகளை அரசாங்கம் குறைக்கிறது என்றால் இந்த நிபுணர் குழு எதற்காக? கண்துடைப்பு நாடகத்தை அனைவருக்கும் காட்டுவதற்குத் தானே? மக்களின் உயிரோடு இப்படியா பொறுப்பற்று விளையாடுவது? பரிசோதனைகள் செய்யாமல் கொரோனா நோய்ப் பரவல் இல்லை என்று சொல்லிக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

ஆபத்தை மறைக்க மறைக்க, அது பேராபத்தாக மாறும் என்று மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறேன். பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள். மாவட்ட வாரியாக தினந்தோறும் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒளிவுமறைவின்றி வெளியிடுங்கள். அதன்மூலம் நோய்ப்பரவல் இல்லை என்பதை நிரூபியுங்கள். கான்டிராக்ட்களில் போலிக் கணக்குகள் எழுதுவதைப் போல, கொரோனாவிலும் பொய்க்கணக்கு எழுதி பொழுது போக்காதீர்கள்; அப்பாவிப் பொது மக்களை ஏமாற்றாதீர்கள்; வரலாற்றுப் பழியை வாங்கிச் சுமக்காதீர்கள் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை செய்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: