திருவிக நகர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு பகுதிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

சென்னை: சென்னையில் கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் திருவிக நகர் மண்டலம் 3வது இடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் வரை இந்த மண்டலத்தில் 542 பேர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 188 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், புளியந்தோப்பு பகுதியில் கொரோனா பரவல் அதிகம் உள்ள தட்டாங்குளம் பகுதியில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், கூடுதல் துணை கண்காணிப்பாளர் ஜெரினா பேகம் மற்றும் திருவிக நகர் மண்டல சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி அருண் தம்பிரான், டிஆர்ஓ அருணா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது, இந்த பகுதியில் அதிகமான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், என வலியுறுத்தினர். இந்த பகுதியில் அதிகளவு தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் பலர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில்  உள்ளனர். இவர்கள் வேலைக்கு வரவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தவறான தகவல் பரவி வருகிறது. அது உண்மையில்லை. இந்த பகுதியில் வசித்து வரும் தூய்மை பணியாளர்கள் யாரும் வேலைக்கு வர வேண்டாம், என டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் இந்த பகுதியில் சிறப்பாக சுகாதார பணிகளை மேற்கொண்ட பணியாளர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, அந்த பகுதியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

முன்னதாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை  சிறப்பு வார்டை பார்வையிட்டு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கூடிய  மருத்துவர்கள் மற்றும் மருத்தவமனை முதல்வர் ஜெயந்தியிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.

Related Stories: