ஓய்வூதியம் வழங்கும் நடைமுறையில் முரண்பாடு புதிய விதிமுறை வகுத்ததுமத்திய பணியாளர் துறை: வங்கிகளுக்கு விரிவான கடிதம்

புதுடெல்லி: ஓய்வூதியம் மற்றும் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் விவகாரத்தில் வங்கிகள் வெவ்வேறு நடைமுறைகளை பின்பற்றுவதாக மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், புதிய விதிமுறை வரையறுத்து, வங்கிளுக்கு கடிதமும் எழுதியுள்ளது. நாடு முழுவதும் 65.26 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதார‍ர்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை சமர்பித்தால் மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.  இந்நிலையில், ஓய்வூதியம் பெறுவதில் ஓய்வூதியதார‍ர்கள் படும் இன்னல்கள் குறித்து மத்திய பணியாளர் அமைச்சகத்துக்கு அடிக்கடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து, ஒருங்கிணைந்த ஓய்வூதிய விதிமுறைகளை மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டது.

இது தொடர்பாக வங்கிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர்களுக்கு அது அனுப்பிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒருங்கிணைந்த விதிமுறைகள் குறித்து மத்திய ஓய்வூதிய செயல்முறை மையங்கள், வங்கி கிளைகளுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.இதன்படி, ஓய்வூதியதார‍ர்கள் இறக்கும் தருவாயில் வங்கியில் கூட்டு கணக்கு வைத்திருந்தால், அவர்களின் கணவரோ அல்லது மனைவியோ தற்போதைய நடைமுறைப்படி படிவம் எண் 14ஐ சமர்ப்பிக்க தேவையில்லை.  ஓய்வூதியம் வழங்கும் வங்கி கிளையில் இறப்பு சான்றிதழை மட்டும் வழங்கினால் போதுமானது.  ஓய்வூதிய கொடுப்பு ஆணை அல்லது வங்கியில் உள்ள வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களின் அடிப்படையில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வூதியம் வழங்கும் வங்கி கிளைகள் புதிய விதிகளின்படி ஆதார் அடிப்படையிலான ஜீவன் பிரமான் டிஜிட்டல் சான்றிதழை கூட சான்றாக பெற்றுக் கொள்ளலாம்.

ஓய்வூதியதார‍ர்கள் 80 வயது நிறைவடைந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அக்டோபர் மாதம் வரையிலும் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

ஓய்வூதியதார‍ரின் ஓய்வூதியம் அவரது மாற்றுத் திறனாளி பிள்ளைக்கு வழங்கப்படும் பட்சத்தில், தற்போதும் அவர் மாற்றுத் திறனாளியாகவே இருக்கிறார் என்பதை நிருபிக்க  5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுத் திறனாளி சான்றிதழ் சமர்ப்பித்தால் போதுமானது. ஓய்வூதியம் பெறுபவரின் இறப்புக்கு பின், அவரது கணவனோ அல்லது மனைவியோ மறு திருமணம் செய்து கொண்டால் அதற்கான சான்றிதழை சமர்பிக்க தேவையில்லை.

உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்காதவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 15ம் தேதி ஓய்வூதியம் பெறும் வங்கி கிளையின் மூலம் எஸ்எம்எஸ் அல்லது இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஓய்வூதியதார‍ர்கள் வர முடியாத நிலையில், அவர்களது வீட்டிற்கே சென்று உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் பெற்றுக் கொள்ளப்படுகிறது. இதற்காக ₹60 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: