டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு: கந்துவட்டிக்கு பணம் வாங்கி சரக்கடிக்கும் குடிமகன்கள்: குடும்பங்கள் சீரழியும் என்று வேதனை

சேலம்: டாஸ்மாக் கடைகள் திறந்ததையொட்டி தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடிமகன்கள்  கந்துவட்டி, மீட்டர் வட்டிக்கு பணம் வாங்கி மதுபானங்களை குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து கடந்த 7ம் தேதி சென்னை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. ஆனால் இரண்டே நாளில் ஐகோர்ட் தடையால் மூடப்பட்டது. தமிழக அரசு அப்பீல் செய்ததையடுத்து டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதித்தது. இதையடுத்து நேற்று காலை 10 மணிக்கு தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. கடைகள் திறப்பதற்கு முன்பே குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.பின்னர் காலை 10 மணிக்கு மேல் விற்பனை ெதாடங்கியது.

இது குறித்து சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஊரடங்குக்கு முன்பே 50சதவீதம் பேர், வட்டிக்கு பணம் வாங்கியும்,சம்பாதித்த பணத்தையும் குடித்து செலவு செய்தனர்.ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு,45 நாட்களுக்கு மேலாக மது குடிக்காமல் இருந்தனர். இந்நிலையில் கடந்த 7,8ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.அந்த இரண்டு நாட்கள் மட்டும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கொலை,அடிதடி,வாகன விபத்து,தகராறு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் அரங்கேறியது.இந்த நிலையில் நேற்று மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடங்கியுள்ளது. கூலி தொழிலாளர்களின் கையில் பணம் இல்லை.பெரும்பாலானோர் குடிக்க கந்துவட்டி,மீட்டர் வட்டிக்கு பணம் வாங்கி குடித்து வருகின்றனர்.இதனால் குடிப்பவர்களின் குடும்பத்தில் பணம் கஷ்டம்,சண்டை சச்சரவு நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுக்கு கடன் தர ஆளு இருக்குங்க...: சேலத்தை சேர்ந்த குடிமகன்கள் கூறுகையில்,‘‘எங்க கையில் எப்பவுமே காசு இருக்காது. ஆனா, கந்துவட்டி,மீட்டர் வட்டிக்கு பணம் தர ஒரு கும்பல் இருக்கு. அவங்க, எங்கள மாதிரியான பார்ட்டிக்கு மட்டும் தான் பணம் தருவாங்க. 500 வாங்கினால் அதில் முன் பணமா ₹50ஐ பிடிச்சுக்குவாங்க. சொன்னபடி ஒரு மாசத்துல திருப்பிக் குடுப்போம். இல்லீன்னா வட்டி எகிறிப்போகும்.

பணத்தை ஒழுங்கா குடுக்கலீன்னா கழுவியும் ஊத்துவாங்க. அப்புறம் வசூலுக்கு என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க. அந்த மாதிரி பார்ட்டிகள் இருக்கும் வரை எங்களுக்கு தண்ணி பஞ்சம் இருக்காது. இரண்டு மாசமா  வேலை வெட்டி இல்லீன்னாலும் 7ம்தேதி டாஸ்மாக் திறந்ததும் பணம் புரண்டது. அந்த ரகசியம் இதுதாங்க,’’என்றனர்.

பொண்ணுக்கே முதல் உரிமைன்னு  8 பாட்டில் அள்ளிய ‘குடி’மகள்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்த டாஸ்மாக் கடையில், மதுபாட்டில் வாங்க காலையிலேயே வந்த குடிமகன்கள், நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு பையுடன் வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்,  டோக்கன் பெற்றுக்கொண்டு வரிசையில் நிற்க சென்றார். குடிமகன்கள்  நீங்க முதல்லே போய் வாங்கிக்கோங்கன்னு கூறிவிட்டனர்.

கடைக்கு சென்ற பெண், விற்பனையாளரிடம் ஒரு டோக்கனை கொடுத்து 8 பாட்டில் கேட்க, அவர் டோக்கனுக்கு 4 தான் தரமுடியும் என மறுக்க, அந்த பெண், பெண்களுக்குத்தான் முன்னுரிமைன்னு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னால் காத்திருந்தவர்கள் சத்தம் போட்டதால், வேறு வழியின்றி கடைக்காரர் 8 பாட்டில்களை கொடுத்து அனுப்பினார். சாதிச்சிட்டோம்லே என்று கெத்தாக நடந்தார் அந்தப்பெண்.

Related Stories: