திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி மீண்டும் தொடக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரை இணைக்கும் 9 பிரதான சாலைகளில், போக்குவரத்து பயன்பாடு அதிகம் உள்ளது திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையாகும். சென்னை, மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, புதுச்சேரி போன்ற பெரு நகரங்களுக்கான பிரதான சாலை என்பதால், இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்க இயலாததாக உள்ளது. இந்த சாலையின் குறுக்கே, திருவண்ணாமலை - விழுப்புரம் ரயில் பாதை அமைந்திருக்கிறது. அதனால், ரயில் கடந்து செல்லும் நேரத்தில் ‘கேட்’ மூடப்படுவதால், நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதும், அதைத்தொடர்ந்து நெரிசலில் சிக்கித்திணறுவதும் வாடிக்கையாகும்.

எனவே, திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் ரயில்வே பாதையின் குறுக்கே, சாலை மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இத்திட்டத்துக்காக, தமிழக அரசு ₹30.38 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது.

இந்த மேம்பாலத்தின் மொத்த நீளம் 666 மீட்டர். ஓடுதள அகலம் 15 மீட்டர். மேலும், திருவண்ணாமலை சாலை வழியாக 82 மீட்டரும், திண்டிவனம் சாலை வழியாக 257 மீட்டரும் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. அதோடு, மேம்பாலத்தின் இருபுறமும், 15 மீட்டர் அகலத்தில் அணுகு சாலையும், 7 மீட்டர் அகலத்தில் இருபக்க சேவை சாலையும் அமைக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், மேம்பாலம் அமைக்கும் பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும், மேம்பால கட்டுமான பணிக்காக அமைத்திருந்த இரும்பு கம்பிகள் கடந்த இரண்டு மாதங்களாக துருப்பிடித்தன. இந்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும் வேலை இழந்து தவித்தனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவில் தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு, கட்டுமான பணிகளை தொடர்ந்து செய்யலாம் எனவும், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கலாம் எனவும் அனுமதித்தது. அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது தொடங்கியிருக்கிறது.

குறைந்தபட்ச தொழிலாளர்களை கொண்டு தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக உருக்குலைந்திருந்த கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்கள் பணியில் ஈடுபடுவதால், திட்டமிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.

Related Stories: