வங்கக்கடலில் ஆம்பன் புயல் மையம்: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

சென்னை:  கடந்த சில நாட்களுக்கு முன் அந்தமான் அருகே உருவான காற்று சுழற்சி மெல்ல மெல்ல வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டு இருந்தது. அது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று அது தெற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுவடையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு “ஆம்பன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. புயலாக வலுவடைந்த பின்னர் நாளை வரை வட மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திராவை ஒட்டிய கடலோரப் பகுதிக்கு வரும்.

அப்போது ஆந்திராவில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும். பின்னர் அந்த புயல் 18ம் தேதி வட கிழக்கு திசையில் பயணிக்கும். இந்த நிகழ்வின் காரணமாக தென் கிழக்கு  வங்கக் கடலில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும். இன்று அது மேலும் அதிகரித்து மணிக்கு 65 கிமீ வேகத்திலும் வீசும். அந்தமான் தவிர  தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் குமரிக் கடல் பகுதியில் மற்றும் ஒரு காற்று சுழற்சி உருவாகியுள்ளதால் கேரளா, கர்நாடாக, மாகே பகுதிகளில் 19ம் தேதி வரை நல்ல மழை பெய்யும். ஒரே நேரத்தில் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் புயல் மற்றும் காற்று சுழற்சி உருவாகியுள்ளதால் தென் மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்யும்.

 

இந்நிலையில், 17ம் தேதி தெற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 75 கிமீ வேகத்தில் வீசும். 18ம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் கடும் சூறாவளி காற்று 19ம் தேதி மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடலில் கடும் சூறாவளிக் காற்று மணிக்கு 85 கிமீ வேகம் முதல் 95 கிமீ வேகத்தில் வீசும். கடல் கொந்தளிப்பாக இருக்கும். இந்த சூழ்நிலை காரணமாக மீனவர்கள் 19ம் தேதி வரை கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையை பொருத்தவரையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும்.

Related Stories: