மழை காலங்களில் 5 கி.மீ சுற்றி செல்கிறோம் மூல வைகையில் பாலம் கட்ட வேண்டும்: வண்டியூர் மலை கிராம மக்கள் கோரிக்கை

வருசநாடு: மழை காலங்களில் 5 கி.மீ தூரம் சுற்றிச் செல்வதால், மூல வைகை ஆற்றில் பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு அருகே வண்டியூர் மலைக் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இலவம் பஞ்சு, கொட்டை முந்திரி, பீன்ஸ், அவரை, எலுமிச்சை, கத்தரி, தக்காளி உள்ளிட்ட பலவற்றை பயிரிடுகின்றனர். இந்த விளை பொருட்களை வெளியூர்களுக்கு கொண்டு செல்ல விவசாயிகள் மூல வைகை ஆற்றை கடந்து சென்று அவதிப்படுகின்றனர். இதேபோல மாணவ, மாணவியரும், பொதுமக்களும் வெளியூர்களுக்கு செல்ல ஆற்றைக் கடந்து செல்கின்றனர்.

60 ஆண்டு காலமாக அவதிப்படுகின்றனர். குறிப்பாக மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, 5 கி மீ சுற்றி தும்மக்குண்டு வழியாக வந்து வருசநாடு கிராமத்திற்கு செல்கின்றனர். இதனால், மூல வைகை ஆற்றில் பாலம் கட்ட வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை என புகார் தெரிவிக்கின்றனர்.

தும்மக்குண்டு ஊராட்சி தலைவர் பொன்னழகு சின்னக்காளை கூறுகையில், ‘மூல வைகை ஆற்றில் மேம்பாலம் கட்டுவது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளோம். கிராமசபை கூட்டம் வாயிலாகவும் தகவல் தெரிவித்துள்ளோம். பாலம் கட்டுவதாக கூறியவர்கள் இன்னும் கட்டவில்லை. மழை காலங்களில் ஆற்றை கடக்க முடியாமல், பொதுமக்கள் 5 கி.மீ தூரம் சுற்றிச் செல்கின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: