கொத்தபுள்ளி பெருமாள் கோயில் கண்மாயில் குடிமராமத்து பணியில் முறைகேடு: விவசாயிகள் குற்றச்சாட்டு

சின்னாளபட்டி: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தபுள்ளி கதிர்நரசிங்கபெருமாள் கோவில் கண்மாயில் குடிமராமத்து பணிகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கதிர்நரசிங்கபெருமாள் கோவில் பின்புறம் உள்ள கதிர்நரசிங்கபெருமாள் கோவில் குளம் கண்மாய் சுமார் 102 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. குளத்தில் குடிமராமத்து திட்டம் மூலம் (2019-20) நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பாக கோவில் குளம் கண்மாயில் மதகு, கலிங்கு பழுதுபார்த்தல், வரத்து வாய்க்கால் தூர் வாறுதல் மற்றும் கரையை பலப்படுத்தும் பணிக்காக ரூ.21 லட்சம் ஒதுக்கீடு செய்து பழநி நங்காஞ்சியாறு வடிநிலக் கோட்டம் செயற்பொறியாளர் தலைமையில் பணி நடந்தது.

நேற்று அப்பகுதியில் சாரல் மழை பெய்தது. இதையடுத்து கண்மாயில் தென்புறம் உள்ள மதகு பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்தது.  இது குறித்து ரெடடியார்சத்திரம் கொத்தபுள்ளியை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரெங்கசாமி கூறுகையில்,‘‘ கண்துடைப்பிற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவசர அவசரமாக போலியாக நீரினை பயன்படுத்துவோர் சங்கம் என பதிவு செய்து முறைகேடுகளை நடத்தியுள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடிந்து விழுந்த சுவரையும், மதகையும் சரிசெய்யாவிட்டால் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம்,’’என்றார்.

கொத்தப்புள்ளியை சேர்ந்த பாலசுப்பிரமணி கூறுகையில்,‘‘கதிர்நரசிங்கபெருமாள் கோவில் கண்மாய் நிறைந்து கலிங்கு (மதகு) வழியாக வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள பழையகுளம், புதுக்குளம், கோனார் குளம் உட்பட ஏழு குளங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. தற்போது மழை பெய்தால் குளத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் குளத்தை சீரமைக்காவிட்டால் விவசாயிகள் போராட்டம் நடத்துவது உறுதி,’’என்றார்.

Related Stories: