குற்றால அருவிகளில் வெள்ளம் குறைந்தது: குளிக்கத்தான் யாருமில்லே

தென்காசி: குற்றால அருவிகளில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நேற்று காலையில் கட்டுக்குள் வந்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தபோதும் ஊரடங்கு காரணமாக யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இரவு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தடாகத்தின் மீது தண்ணீர் கொட்டியது. மேலும் வெள்ளத்தில் ஒருசில மரக்கட்டைகளும் அடித்து வரப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்தது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் பரந்து விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி, ஆகியவற்றிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. நேற்று வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இதமான சூழல் நிலவியது. அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்த போதும் ஊரடங்கு காரணமாக யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. தென்காசி பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக தெப்பகுளம் பகுதியில் மரமொன்று சாய்ந்தது.

Related Stories: