ஊரடங்கால் வியாபாரிகள் வராததால் ஓமலூரில் தேங்காய் டன்னுக்கு ரூ10 ஆயிரம் விலை சரிவு: விவசாயிகள் வேதனை

ஓமலூர்: ஊரடங்கால் வெளிமாநில வியாபாரிகள் வராததால், ஓமலூரில் உள்ள  குடோன்களில் தேங்காய் அதிகளவில் தேங்கியுள்ளது. கடந்த ஒரே மாதத்தில்  தேங்காய் டன்னுக்கு ₹10 ஆயிரம் விலை சரிந்து ₹26 ஆயிரத்துக்கு  விற்பனையானது. சேலம் மாவட்டம்  ஓமலூர், காடையாம்பட்டி பகுதிகளில் தேங்காய் விவசாயம் பிரதானமாக உள்ளது.  இங்கு விவசாயிகளிடம் தேங்காயை கொள்முதல் செய்து, பல்வேறு மாநிலங்களுக்கு  அனுப்பி வைக்கும் பணியில் வியாபாரிகள் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.  தற்போது, கொரோனா பாதிப்பால் வெளிமாநில வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்ய  முன்வரவில்லை. இதனால், ஓமலூர், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட 20 கிராமங்களில்  உள்ள குடோன்களில் அதிகளவில் தேங்காய் தேங்கியுள்ளது.

தற்போது அக்னி  வெயில் ஆரம்பித்துள்ளதால், குடோன்களில் அதிக நாட்கள் தேங்காய்களை வைக்க  முடியாது. வெடித்து வீணாகி விடும் என்பதால், விவசாயிகள் வேறு வழியின்றி  கிடைத்த விலைக்கு தேங்காய்களை விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து  விவசாயிகள் கூறுகையில், `தேங்காய் விளைச்சல் தற்போது அதிகரித்துள்ளது.  ஆனால், வியாபாரிகள் யாரும் வராததால் தேங்காய் தேக்கமடைந்துள்ளன. மார்க்கெட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு டன் தேங்காய் ₹36  ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது  ₹26 ஆயிரமாக குறைந்துள்ளது. எனவே,  தென்னை விவசாயிகள் பாதிப்பதை தடுக்க அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,’  என்றனர்.

Related Stories: