தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை கல்லூரிகளில் ‘ஷிப்ட்’ முறை ரத்து: பகுதிநேர வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம்

சேலம்: தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சுழற்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்கள், பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் 110க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக அரசு கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, காலை, மாலை  என சுழற்சி முறையில் (ஷிப்ட் அடிப்படையில்) வகுப்புகள் மாற்றியமைக்கப்பட்டன. இதனால்,தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை நெருங்கியது. இதனிடையே, அரசு கல்லூரியில் பின்பற்றப்பட்டு வரும் சுழற்சி முறை ரத்து செய்யப்படுவதாக, கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜோதி வெங்கடேசுவரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘காலை வகுப்பு மாணவர்கள் கல்லூரிக்கு வருவதிலும், மதிய வகுப்பு மாணவர்கள் வீட்டிற்கு செல்வதிலும் பல்வேறு சிரமங்கள் இருந்து வருகிறது. குறிப்பாக மாணவிகள் பலர் ரத்தசோகை உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே சுழற்சி 1 மற்றும் சுழற்சி 2 முறைகள் ரத்துசெய்யப்பட்டு, கடந்த 2006க்கு முன்னர் இருந்தபடி, அரசு கல்லூரிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை செயல்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு கல்லூரி பேராசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் அரசுக்கல்லூரிகளில் படிக்கும் 80 சதவீத மாணவர்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். சுழற்சி 1 மாணவர்களுக்கான வகுப்புகள் காலை 7.30 முதல் மதியம் 1.30 மணி வரையிலும், சுழற்சி 2 வகுப்புகள் மதியம் 1.30 மணிமுதல் மாலை 6.30 மணி வரையிலும் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், நாள்தோறும் காலை, மாலை கிடைக்கும் ஓய்வு நேரத்தில், பல்வேறு வகையான பகுதிநேர வேலைகளில்  மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்மூலம் கிடைக்கும் வருவாய், அவர்களின் கல்லூரி படிப்பு செலவிற்கும், படிக்கும் போதே குடும்பத்துத்கு வருவாய் ஈட்டி கொடுக்கவும் பெரிதும் உதவி வருகிறது. ஆனால், திடீரென சுழற்சி முறை ரத்து செய்யப்பட்டால், மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும்,உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பலமடங்கு சரியும். இதுதவிர, மாணவர்களின் விளையாட்டு பங்களிப்பு குறையும். எனவே,அரசு கல்லூரிகளில் சுழற்சி முறை ரத்து செய்யும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: