கோயம்பேடு சந்தையை திறக்க கோரிய வழக்கு: மே 26-ம் தேதிக்குள் மாநகராட்சி, காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவின் கோர தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதற்கு, கோயம்பேடு  மார்க்கெட் தான் காரணம் என்று அனைவரும் குற்றச்சாட்டு கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் சில வியாபாரிகள், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு  ஏற்பட்ட பிறகுதான் அதிகாரிகள் திடீரென விழித்துக் கொண்டு, பழம் மற்றும் பூ மார்க்கெட்டை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க தொடங்கினர்.

பொதுமக்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, கொரோனா உற்பத்தி சந்தையாக மாறிய கோயம்பேடு மார்க்கெட்டை மூடுவதாக தமிழக அரசு கடந்த 4-ம் தேதி அறிவித்தது. இருப்பினும்,  பொதுமக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும் சென்னை திருமழிசையில் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடியை அரசு  தொடங்கியுள்ளது.

இதற்கிடையே, கோயம்பேடு உணவு தானியங்கள் விற்பனையகங்களுக்கு மாற்று இடம் அரசு அளிக்கவில்லை. விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளதால் பருப்பு, தானியங்கள் விலை உயர்ந்துள்ளது. எனவே, கோயம்பேடு சந்தையை உரிய  பாதுகாப்புடன் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி கோயம்பேடு உணவு தானிய வியாபாரிகள் சங்கத்தலைவர் சந்திரேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த  உயர்நீதிமன்றம், மனு குறித்து சிஎம்டிஏ. சிறப்பு அதிகாரி , சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோர் வரும் 26-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை  அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

Related Stories: