சின்னசேலம் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் அமைக்கும் பணி தீவிரம்

சின்னசேலம்: சின்னசேலம் ரயில் நிலையத்தில் ஊரடங்கு நிலையிலும் பயணிகள் நலன் கருதி பிளாட்பாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மீட்டர் கேஜ் பாதையாக இருந்து பின் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், விருத்தாசலம், சேலம், மங்களூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ரயில்கள் சென்று வருகிறது. இதனால் தினசரி பள்ளி, கல்லூரி சென்று வரும் ஏராளமான மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருப்பதுடன், பொதுமக்கள், தொழிலாளர்கள், வணிக பிரமுகர்கள், அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்பவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பயன் உள்ளதாக இருக்கிறது.இந்நிலையில் சின்னசேலம் ரயில் நிலையத்தில் பயணிகள் நலன் கருதி மேம்பால வசதி, நடை மேடை வசதி, சின்னசேலத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு ரயில் வசதி செய்து தர வேண்டும் என்று பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சின்னசேலம் ரயில் நிலையத்தை நவீனப்படுத்தும் வகையில் கடந்த ஓராண்டாகவே நடை மேம்பாலம் கட்டப்பட்டு பணி முடிவடைந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இரண்டாவது நடை மேடையில் கல் பதித்து மேற்கூரையும் அமைத்துள்ளதுடன், கழிப்பறையும் கட்டி உள்ளனர்.

இதையடுத்து மேலும் ரயில் நிலையத்தின் நிலைய அலுவலக முன்புள்ள பிளாட்பாரத்தில்தான் ரயில் வரும் வரை பயணிகள் அதிகளவில் உட்கார்ந்து இருப்பார்கள். இந்த பிளாட்பாரத்தையும் பிரித்து அகலப்படுத்தி, நவீனப்படுத்தும் வகையில் நிழற்குடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கு அமலில் இருந்த போதும், ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் நலன் கருதி பிளாட்பாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சின்னசேலம் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள உளுந்தூர்பேட்டை, ஆத்தூர் ரயில் நிலையங்களை காட்டிலும் மிகவும் நவீனமான முறையில் வடிவமைக்கப்பட்டு வருவதை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: