கொரோனா தடுப்பு தீவிரம் முக கவசம் அணியாமல் வந்தால் ரூ.100 அபராதம்: தர்மபுரி நகராட்சி நிர்வாகம் அதிரடி

தர்மபுரி: தர்மபுரி நகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு தீவிரத்தையொட்டி, வரும் 15ம் தேதி முதல் முக கவசம் அணியாமல் வந்தால் ₹100 அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

தர்மபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் 70 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகமும், தர்மபுரி நகராட்சி நிர்வாகமும் இணைந்து முழுவீச்சில் இறங்கியுள்ளது. தர்மபுரி நகராட்சி பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்ல சில கட்டுப்பாடுகளை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு அனுமதி சீட்டு நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட உள்ளது. 1வது வார்டு முதல் 11வது வார்டு வரை இளஞ்சிவப்பு நிற அனுமதி சீட்டு வைத்திருக்கும் நபர்கள் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் அனுமதி சீட்டை காண்பித்து கடைவீதியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

12வது வார்டு முதல் 22வது வார்டுவரை நீல நிற அட்டை வைத்திருக்கும் நபர்கள், செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், 23வது வார்டு முதல் 33வது வார்டு வரை மஞ்சள் நிற அட்டை வைத்திருக்கும் நபர்கள், புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கிச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி சீட்டு நடைமுறை வரும் 15ம் தேதி முதல் தர்மபுரி நகராட்சி பகுதியில் அமல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து தர்மபுரி நகராட்சி ஆணையர் சித்ரா கூறியதாவது: கொரோனா தொற்று தடுக்கும் வகையில், தர்மபுரி நகரத்தில் உள்ள கடைகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடை திறப்பதற்கு முன்பும், கடை மூடிய பின்பும் கட்டாயமாக கிருமி நாசினி மருந்து தெளிக்க வேண்டும். இடையில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும். கடையின் உரிமையாளர், பணியாளர்கள் கட்டாயம் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கடைகளில் இருப்பவர்களும், பொருள் வாங்க வரும் நபர்களும், கட்டயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.

முக கவசம் அணியவில்லை என்றால் பொருட்கள் கொடுக்கக்கூடாது. விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும். வரும் 15ம் தேதிக்கு பின்பு தர்மபுரி நகரத்துக்குள் முக கவசம் அணியாமல் வந்தால் ₹100 அபராதம் விதிக்கப்படும். வாகனங்கள் நிறுத்த மாவட்ட நிர்வாகத்தால் ஒதுக்கீடு செய்து தரும் இடங்களை பயன்படுத்த வேண்டும். கடைகள் முன் வாகனங்களை நிறுத்தக்கூடாது. மேலும், ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்கள் நிறுத்த வேண்டும். அதற்கு வாடகை வசூலிக்கப்படும். டூவீலருக்கு ₹5ம், நான்கு சக்கர வாகனங்களுக்கு ₹10ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: