கவலைப்படாதீங்க இன்சூரன்ஸ் பிரீமியம் கட்ட இந்த மாதம் வரை அவகாசம்: காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் ஆயுள் காப்பீடு பிரீமியம் புதுப்பிக்க கெடு முடிந்திருந்தாலும், அந்த பிரீமியத்தை செலுத்த இந்த மாத இறுதி வரை அவகாசம் நீட்டித்து இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  இன்சூரன்ஸ் பாலிசி ஒவ்வொருவருக்கும் கட்டாய தேவை ஆகிவிட்டது. முன்பு வரிச்சலுகைக்காக மட்டும் காப்பீடு எடுத்தனர்.  ஆனால், தற்போது ஏறக்குறைய பெரும்பாலான மக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் ஆயுள் காப்பீடு எடுத்துள்ளனர். இருப்பினும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பெரும்பாலானோர் தங்கள் காப்பீட்டை புதுப்பிக்க இயலவில்லை. ஆன்லைன் வசதி இருந்தாலும், பணத்தட்டுப்பாடு காரணமாக பலர் காப்பீடு செலுத்த தவறி விட்டனர்.

இந்த சூழ்நிலையில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் கடந்த மார்ச் 23ம் தேதி மற்றும் ஏப்ரல் 4ம் தேதிகளில் அறிவிப்பு வெளியிட்டது. அதில், கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஆயுள் காப்பீடு பிரீமியம் செலுத்த வேண்டியவர்களுக்கு, 30 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.  கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு, தற்போது 3ம் முறையாக நீட்டிக்கப்பட்டு, வரும் 17ம் தேதி வரை அமலில் உள்ளது. எனவே, இதை கருத்தில் கொண்டு புதிய உத்தரவை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில், கடந்த மார்ச் மாதத்தில் ஆயுள் காப்பீடு பிரீமியம் செலுத்த வேண்டியவர்களுக்கு, பிரீமியம் செலுத்துவதற்கான அவகாசம் இந்த மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

பிரீமியம் வசூல் 2வது மாதமாக சரிவு

காப்பீடு பிரீமியம் வசூல் கடந்த மார்ச் மாதம் சரிந்தது. தொடர்ந்து 2வது மாதமாக, பிரீமியம் வசூல் ஏப்ரலிலும் குறைந்துள்ளது. காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய புள்ளி விவரப்படி, கடந்த மாதம் புதிய பிரீமியம் வசூல்  6,727.74 கோடி. இது முந்தைய ஆண்டு ஏப்ரலில் 9,981.88 கோடி. இத்துடன் ஒப்பிடுகையில் பிரீமியம் வசூல் 32.6 சதவீதம் சரிந்துள்ளது. எல்ஐசி நிறுவனத்தின் பிரீமியம் வசூல் 32.01 சதவீதம், தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வசூல் 33.2 சதவீதம் குறைந்துள்ளது.

Related Stories: