மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் தாவரவியல் பூங்காவை சுற்றி பார்த்த செவிலியர்கள்: பூ கொடுத்து, கைகளை தட்டி வரவேற்றதால் நெகிழ்ச்சி

ஊட்டி: கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு மத்தியில் ஊட்டி தாவரவியல் பூங்காவை பார்வையிட வந்த சுகாதார செவிலியர்களை பூ கொடுத்தும், இருபுறமும் நின்று கை தட்டி வரவேற்று தோட்டக்கலைத்துறை அசத்தியது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 14 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், 9 பேர் முழுைமயாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீலகிரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளை கண்டறியும் பணிகளில் கிராம சுகாதார செவிலியர்கள்,அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த இரு மாதங்களாக கண்காணிப்பு பகுதிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் சுகாதார செவிலியர்கள் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். நீலகிரியில் சுகாதார பணிகளில் ஈடுபட்ட கிராம சுகாதார செவிலியர்கள், ெசவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் மன அழுத்ததில் இருந்து விடுபட்டு புத்துணர்வு அளிக்கும் வகையில் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு அழைத்து சென்று பார்வையிட மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவின் ஆலோசனையின்படி தோட்டக்கலைத்துறை சிறப்பு ஏற்பாடுகள் செய்தது.  

அதன்படி நேற்று காலை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு சுகாதார செவிலியர்கள் வந்தனர். அவர்களுக்கு பூங்கா உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பூங்கா ஊழியர்கள் மலர்கள் கொடுத்து வரவேற்றனர். பாதையின் இரு புறமும் பூங்கா ஊழியர்கள் அணிவகுத்து நின்று செவிலியர்களுக்கு கை தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதேபோல் ஊட்டி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செவிலியர்கள் பூங்காவில் செய்யப்பட்டிருந்த மலர் அலங்காரங்களை பார்த்து ரசித்ததுடன் சமூக இடைவெளியை பின்பற்றி புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். இது குறித்து கிராம சுகாதார செவிலியர்கள் கூறுகையில், கடந்த 2 மாதங்களாக ஓய்வின்றி சுகாதார பணியாற்றி வந்தோம். புத்துணர்வு பெறுவதற்காக பூங்காவிற்கு வந்த போது தோட்டக்கலை ஊழியர்கள் பூங்கொத்துகள் கொடுத்து கை தட்டி எங்களை வரவேற்றதில் நாங்கள் நெகிழ்ச்சியடைந்தோம். கடந்த இரு மாதங்கள் பட்ட துன்பங்கள் அனைத்தும் பறந்தோடி விட்டது, என்றனர்.

Related Stories: