டாஸ்மாக்கில் மது வாங்க ஆன்லைனில் ரசீது? அதிகாரிகள் தகவல்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க ஆன்லைனில் பணம் செலுத்தி அதற்கான ரசீதை டாஸ்மாக் கடைகளில் கொடுத்தால் மட்டுமே மது வழங்கப்படும் என்ற புதிய நடைமுறை வர உள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 7ம் தேதி சென்னை நீங்கலாக மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.295 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது. இந்தநிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஊரடங்கு உத்தரவு முடியும்வரை மதுக்கடைகளை திறக்கக்கூடாது  என நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தில் ஆன்லைனில் மது விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், பல்வேறு சிக்கல்கள் எழும் என்பதால் இது நடைமுறைக்கு வரவில்லை. எனவே, இனிமேல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க அதற்கான இணையத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றால் மட்டுமே கடைகளில் மது வழங்கப்படும் என்ற புதிய நடைமுறை விரைவில் தமிழகத்தில் வர உள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதுகுறித்து, டாஸ்மாக் வட்டாரங்கள் கூறுகையில், டாஸ்மாக் கடைகளில் நேரடியாக விற்பனை செய்யும் போது கூட்ட நெரிசல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் எழுகிறது.

எனவே, புதிய இணையதளம் அல்லது செல்போன் செயலி உருவாக்கப்பட உள்ளது. அதில் மதுவகைகளை வாங்குவதற்கான பணத்தை செலுத்தி அதற்கான ரசீதை கடைகளில் கொடுத்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என்ற புதிய நடைமுறையை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கூட்ட நெரிசலை குறைத்து, அதிக விலைக்கு மதுவகைகள் விற்கப்படுவதை தடுக்க முடியும். இந்த நடைமுறை விரைவில் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு கூறினர்.

Related Stories: