சீனாவின் பிரபல பொழுதுபோக்கு பூங்கா 3 மாதங்களுக்குப் பிறகு டிஸ்னிலேண்ட் திறப்பு: முதல் நாளே மக்கள் குவிந்தனர்

ஷாங்காய்: கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் மூடப்பட்ட சீனாவின் பொழுதுபோக்கு பூங்காவான டிஸ்னிலேண்ட் மூன்றரை மாதங்களுக்கு பின்னர் நேற்று திறக்கப்பட்டது.  சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இது தற்போது 200 நாடுகளில் பரவியுள்ளது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் சீனாவில் ஊரடங்கு கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக பல லட்சம் மக்கள் வந்து செல்லும் உலகின் மிகப் பிரபலமான பொழுதுபோக்கு பூங்காவான ஷங்காய் டிஸ்னிலேண்டும் மூடப்பட்டது. இது உலகில் உள்ள சிறந்த 6 பொழுதுபோக்கு பூங்காக்களில் ஒன்றாகும்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுதல் கட்படுத்தப்பட்டு உள்ளதால் சீனாவில் இயல்புநிலை திரும்பி வருகின்றது. இதனால், அனைத்து கட்டுப்பாடுகளும் விதிமுறைகளுடன் தளர்த்தப்பட்டு வருகின்றது. வர்த்தக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் இயங்க தொடங்கியுள்ளன. ஜிம் மற்றும் பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்டவை செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல். ஷாங்காய் டிஸ்னிலேண்டும் மூன்றரை மாதங்களுக்கு பின்னர் பல்வேறு விதிமுறைகளுடன் நேற்று திறக்கப்பட்டது.

இதற்கான டிக்கெட்டுக்கள் ஆன்லைனில் விற்கப்பட்டன. கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் 30 சதவீத டிக்கெட்டுக்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. மேலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளும் பின்பற்றப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த பூங்கா திறக்கப்பட்ட முதல் நாளே, அதை பார்க்க மக்கள் குவிந்தனர்.

Related Stories: