செல்போன் எண்களுக்கு மெசேஜ் அனுப்பி மாணவிகளுக்கு வலைவிரிக்கும் கும்பலை வளைக்க தனிப்படை: மதுரை போலீஸ் கமிஷனர் உத்தரவு

மதுரை:  மதுரையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவருக்கு செல்போனில் ஆபாச எஸ்எம்எஸ்கள் அனுப்பி, பாலியலுக்கு அழைத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அவரது குடும்பத்தினர், தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமமாலா தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், மாணவிகளின் செல்போன் எண்கள் மூலம், அவர்களிடம் ஆசை வார்த்தை பேசி சீரழித்து வருவதாக, 3 வாலிபர்களின் செல்போன் எண்களுடன் தகவல், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுபற்றி அறிந்த அந்த வாலிபர்கள் மூவரும், வியாபார போட்டியில் சமூக வலைத்தளங்களில் தங்கள் மீது அவதூறு பரப்பப்படுவதாக தல்லாகுளம் காவல்நிலையத்தில் தனித்தனி புகார் அளித்தனர்.

மூவரது செல்போன்களில் இருந்து யாருக்காவது தகவல் பரிமாற்றம் நடத்தப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். தனிப்படையினர், சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து, தகவல் பரிமாற்றம் குறித்து விசாரணையை வேகப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறும்போது, ‘‘மதுரையில் கல்லூரி, பள்ளி, விடுதி மாணவிகளை குறி வைத்து, வாலிபர்கள், மாணவிகளின் செல்போன் எண்களை பெற்று எஸ்எம்எஸ் அனுப்பியும், செல்போனில் தொடர்ந்து பேசியும் பாலியல் தொந்தரவு செய்து வருவதாக புகார்கள் வந்தன. அந்த செல்போன் அழைப்புகளைக் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்.

கடந்த 6 மாதத்தில் 40க்கும் அதிகமான பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சில புரோக்கர்கள் மாணவிகள், இளம்பெண்களை பயன்படுத்தி உள்ளனர். மசாஜ் சென்டர் என்ற பெயரிலும் தவறுகள் நடந்துள்ளன. பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் தெரிவிக்க முன்வந்தால், நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தலாம்’’ என்றனர்.

Related Stories: