திருமங்கலம் பகுதியில் கம்பு விளைச்சல் அமோகம்

திருமங்கலம்: திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கம்பு அதிகளவில் விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான அம்மாபட்டி, மீனாட்சிபுரம், செளடார்பட்டி, கிழவனேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கம்பு பயிரிட்டுள்ளனர். ஆடி, ஆவணி விதைத்து தைமாதத்தில் முதல்பட்டத்தினை எடுத்துள்ள நிலையில் இரண்டாம்பட்டமாக மாசியில் விதைத்து வைகாசியில் அறுவடை செய்ய உள்ளனர்.இந்த இரண்டாம்பட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலங்களில் சரிவரபணிகளை செய்யமுடியாமல் தவித்த விவசாயிகளுக்கு அரசு அறிவித்த 50 சதவித தொழிலாளர்களை கொண்டு பணி செய்யலாம் என்ற அறிவிப்பு மனநிறைவை தந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக இடைவெளிவிட்டு விவசாயிகள் வயல்களில் கம்பு சாகுபடியில் தீவிரம் காட்டியுள்ளனர்.திருமங்கலம் பகுதியில் பிறபயிர்களில் நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கம்புக்கு எந்த தாக்கமும் இல்லாதது விவசாயிகளுக்கு ஆறுதலை தந்துள்ளது.

அதே நேரத்தில் குருவிகள் தொல்லை ஒருசில இடங்களில் இருந்தாலும், அதனையும் சமாளித்து விவசாயிகள் கம்பு சாகுபடியில் தீவிரம் காட்டிவருகின்றனர். எதிர்பார்த்த மழைபொழிவு இல்லாத நிலையிலும் கிணற்றுபாசனத்தை கொண்டு தண்ணீர் பாய்ச்சி கம்பினை பாதுகாத்துள்ளனர். இந்த பகுதி விவசாயிகள் எதிர்பார்த்தது போலவே, கம்பும் திருமங்கலம் பகுதியில் அதிகளவில் விளைச்சலை தந்துள்ளது விவசாயிளிடம் நம்பிக்கையை உண்டாக்கியுள்ளது. இதுகுறித்து விவசாயி ராஜா கூறுகையில், ``அடுத்தமாதம் அறுவடை செய்ய உள்ளோம். கொரோனா தாக்கத்தால் வேலையாட்கள் குறிப்பிட்ட அளவிற்குள் வைத்து பணிசெய்து வருகிறோம். அறுவடைக்கு கொரோனா வைரஸ் குறைந்தால் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மூடை 1400 முதல் 1600 வரையில் விலைபோகும்’’ என்றார்.

Related Stories: