3 நாட்களுக்குள் பணியில் சேர வேண்டும்: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு 2,570 செவிலியர்களை பணியமர்த்த முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்புப்பணியில் 2,570 செவிலியர்களை பணியமர்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பில் இந்தியளவில் 4-வது இடத்தில் உள்ள தமிழகத்திலும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இருப்பினும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க கூடுதல் செவிலியர்கள் தேவைப்படுவதாக தெரிகிறது. இதனையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மேலும் 2,570 செவிலியர்களை 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் 3 நாட்களுக்குள் பணியில் சேர செவிலியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவகல்லூரி, தலைமை மருத்துவமனைகளில் தலா 40 பேர் பணியமர்த்தப்படுவார்கள்; தாலுகா மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப 10 முதல் 30 பேர் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும் என்றும் தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related Stories: