புனேயில் இருந்து சிறப்பு குழு வருகை

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் கமல் கிஷோர் கூறுகையில், ‘‘ஆலையில் இருந்து வாயு கசிவால், சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்த 1000 பேர் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு ரசாயன பேரழிவு. இந்த விஷயத்தில் உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவுவதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையின் வேதியியல், உயிரியல் மற்றும் அணு, கதிரியக்க துறைகளில் அனுபவமுள்ள ஒரு சிறப்பு குழு புனேவிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் நிலைமையை மதிப்பீடு செய்வதற்கும், தேவையான உதவிகளையும் வழங்குவார்கள்’’ என்றார்.

3 பிரிவுகளின் கீழ் வழக்கு

விசாகப்பட்டினம் எல்.ஜி.பாலிமர் தொழிற்சாலையில் விஷ வாயு வெளியேறியதற்கு நிர்வாக அலட்சியமே காரணம் எனக்கூறி கோபாலப்பட்டினம் போலீசார் அந்நிறுவனத்தின் மீது 337, 338, 304 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மயங்கிய போலீசார்,  செத்து மடிந்த பறவைகள்

விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட போலீசார், தேசிய மீட்பு படையினர் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உள்ளிட்டோரும் மயங்கி விழுந்தனர். அவர்களும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வானில் பறந்து சென்ற பறவைகள், தெருநாய்கள், எலி போன்றவையும் துடிதுடித்து இறந்தது.  இதுதவிர பசுமையாக காணப்பட்ட மரங்களின் இலைகளும் சிவப்பு நிறத்தில் மாறியது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் இருந்துசிறப்பு ரசாயனம்

விசாகப்பட்டினத்தில் காற்றில் கலந்துள்ள ஸ்டைரின் வாயுக்கசிவை போக்க பிடிபிசி எனப்படும் சிறப்பு ரசாயனம் தூவப்பட உள்ளது. இது குஜராத்தின் வாபி நகரத்தில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆந்திர அரசு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, அவசர தேவைக்காக 500 கிலோ பிடிபிசி ரசாயனத்தை விசாகப்பட்டினத்திற்கு அனுப்பி குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.

மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் விஷ வாயு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க மத்திய, மாநில அரசுக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்டுள்ளது.  மேலும் இதுதொடர்பான வழக்கை அடுத்த வாரத்திற்கு விசாரணைக்கு ஏற்பதாகவும், மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்திற்கு மத்தியில் இந்த நிறுவனம் எவ்வாறு செயல்பட்டு வந்தது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிமன்ற உதவிக்காக பார் அசோசியேஷன் தலைவரை நியமித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மனித உரிமைகள் ஆணையமும்  மாநில அரசுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஊடகத்தில் வந்த காட்சிகளின் ஆதாரமாக இதனை தானாக முன்வந்து ஏற்ற மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க ஆந்திர மாநில முதன்மை செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

Related Stories: