விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்த விபத்தில் 10 பேர் பலி: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்

டெல்லி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அருகே உள்ள ஆர்ஆர் வெங்கடாபுரம் கிராமத்தில் எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற  ரசாயன ஆலை இயங்கி வருகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எல்ஜி பாலிமர் ஆலை  மூடப்பட்டிருந்தது. இன்று ஆலையை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு முதல் தொழிலாளர்கள்  தொழிற்சாலையில் உள்ள உபகரணங்கள் இயந்திரங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை 3  மணியளவில் ஆலையில் பயன்படுத்தப்படும் ஸ்டைரின் வாயு செல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பிலிருந்து வாயு வெளியேறி சுமார்  மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் ஐந்து கிராமங்களில் பரவியது.

இதனால், 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள்  ஆகியோர் வளர்த்துவரும் ஆடு, மாடு,கோழி, நாய் ஆகியவை உள்ளிட்ட கால்நடைகளுக்கு முதலில் பாதிப்பு ஏற்பட்டு அதை மயங்கி  சரிந்தன. சற்று நேரத்தில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் காற்றில் ஒரு விதமான நெடி வாசனை பரவுவதை உணர்ந்து  என்ன நடக்கிறது என்று தெரியாமல் வீடுகளிலிருந்து வெளியே ஓட்டம் பிடித்தனர். வீடுகளுக்கு வெளியே காற்றில் ஸ்டைரின் வாயு  மிகவும் அடர்த்தியாக இருந்தால் பல பேர் சாலைகளில் மயங்கி விழுந்தனர். இந்த விபத்தில் 5 கிராமங்களை சேர்ந்த சுமார் 5  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் குழந்தை உட்பட 10 பேர் இதுவரை மூச்சுத்திணறல் ஏற்பட்டு  உயிரிழந்துள்ளனர். மேலும், 20 ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பல உயிர்களை பலி கொண்ட விசாகப்பட்டினம் அருகே நடந்த விஷவாயு கசிவு விபத்து பற்றி அறிந்து வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அனைவரது பாதுகாப்பிற்காகவும் மற்றும் காயமடைந்தோர் குணமடையவும் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன். நிலைமையை விரைவாகக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்த அனைத்தையும் நிர்வாகம் செய்து வருகிறது என்று நான் நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Related Stories: