சமூக இடைவெளி கடைபிடிக்காத பெரம்பூர் வீனஸ் காய்கறி மார்க்கெட் மூடல்

பெரம்பூர்: திருவிக நகர் மண்டலத்தில் மக்கள் அதிகமாக கூடி காய்கறி வாங்கிய பெரம்பூர் வீனஸ் காய்கறி மார்க்கெட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா நோய்தொற்று பாதிப்பில் திருவிக நகர் மண்டலம் முதலிடத்தை வகிக்கிறது. அம்மண்டலத்தில் உள்ள மார்க்கெட் பகுதிகள், மக்கள் அதிகமாக கூடுமிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், திருவிக நகர் மண்டல சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி அருண் தம்புராஜ் மற்றும் மண்டல அதிகாரி நாராயணன், செயற்பொறியாளர் செந்தில்நாதன் ஆகியோர் கொண்ட குழு நேற்று முன்தினம் மாலை மக்கள் அதிகமாக கூடும் பெரம்பூர் வீனஸ் காய்கறி மார்க்கெட் பகுதியை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு மக்கள் சமூக இடைவெளியின்றி கூட்டமாக நின்று காய்கறி வாங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, அந்த மார்க்கெட்டை உடனடியாக மூடும்படி சுகாதார ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட கடைகள் அவசர அவசரமாக மூடப்பட்டன. இதனையடுத்து, பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் உள்ள லூர்து பள்ளி வளாகத்தை நேற்று காலை சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி குழு ஆய்வு செய்தது.

இந்த வளாகத்தில் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இங்கு இன்று முதல் காய்கறி மார்க்கெட் செயல்பட துவங்கும். அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி காய்கறி வாங்கி செல்லும்படி மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தினர்.

Related Stories: