ஆண்டிபட்டி கணவாய் செக்போஸ்டில் வாகனங்களில் வருபவர்களுக்கு ‘ஸ்வாப் டெஸ்ட்’ பரிசோதனை: கிருமி நாசினி தெளிக்கும் சுகாதாரத்துறை

ஆண்டிபட்டி: தினகரன் செய்தி எதிரொலியாக, ஆண்டிபட்டி கணவாய் செக்போஸ்டில், வெளியிலிருந்து வாகனங்களில் வரும் பயணிகளுக்கு ஸ்வாப் டெஸ்ட் பரிசோதனையும், வாகனங்களுக்கு கிருமி நாசினியும் தெளிக்கப்படுகிறது.தேனி மாவட்டத்தில் 44 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்; 42 பேர் குணமடைந்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், போடியை சேர்ந்த ஒரு பெண் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.ஆரஞ்சு மண்டலமக மாறிய தேனி மாவட்டத்தில் மீண்டும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதால், மாவட்ட எல்லைகளை தீவிரமாக கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் அமைந்துள்ள செக்போஸ்டில் கண்காணிப்பை தீவிரப்படுத்தாமல், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நபர்களின் பெயர், முகவரிகள் மட்டும் வாங்கிக்கொண்டு சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா? என்று சோதனை செய்யாமலும், ஸ்வாப் டெஸ்ட் எடுக்காமலும், வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்காமலும் சுகாதாரத்துறையினர் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்த செய்தி நேற்று நமது தினகரன் நாழிதழில் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று கணவாய் பகுதி மாவட்ட செக்போஸ்டில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோவன் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்ட் சீனிவாசன் தலைமையிலான குழு வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நபர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகள் உள்ளதா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் வருபவர்களுக்கும், சிவப்பு மண்டலத்தில் இருந்து வருபவர்களுக்கும் சளி, இருமல், காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு ஸ்வாப் டெஸ்ட் பரிசோதனை மேற்கொள்ளபடுகிறது. மாவட்ட நிர்வாகத்தில் உரிய அனுமதி பெறாமல் வருபவர்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

மாவட்ட எல்லையில் நுழையும் அனைத்து வாகனத்திற்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதுவரை 49 நபர்களுக்கு ஸ்வாப் டெஸ்ட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இன்ஸ்பெக்டர் சரவணதெய்வேந்திரன்,சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் மற்றும் மருத்துவர்கள் சண்முகப்பிரியா, நவீன்குமார், மாரீஸ்வரன் உள்ளிட்ட மருத்துவர்களும் தீவிர பரிசோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: