ஏரல்-சூழவாய்க்கால் இடையே பழமையான பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து அபாயம்

ஏரல்: ஏரலில் இருந்து சூழவாய்க்கால் செல்லும் சாலையில் பாலத்தில் தடுப்பு சுவர் உடைந்து கிடப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஏரல் வழியாக வை. வடகால் பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் வரும் தண்ணீர் விவசாயத்திற்காக இப்பகுதியில் உள்ள குளங்களுக்கு செல்கிறது. ஏரலில் இருந்து சூழவாய்க்கால் செல்லும் சாலை ஓரம் வழியாக வடகால் வாய்க்கால் செல்லும் இடத்தில் ஆறுமுகமங்கலம் குளத்திற்கு தண்ணீர் செல்வதற்காக மடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வாய்க்காலில் இருந்து குளத்திற்கு பிரிகின்ற இடத்தில் மடைக்கு மேல் பாலம் உள்ளது. இந்த பாலமானது மிக பழமையானதாகவும் அகலம் குறைவாக உள்ளது. பெரிய வாகனம் செல்லும் போது இதன் தடுப்பு சுவரை உரசுவது போல் செல்ல நேரிடும்.  இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வழியாக சென்ற ஒரு லாரி இந்த பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து சென்றது. அதன்பின் இந்த தடுப்பு சுவர் இன்னும் கட்டப்படாமல் அப்படியே உள்ளது.

 சூழவாய்க்கால், சிறுத்தொண்டநல்லூரில் இருந்து ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் சைக்கிளில் இந்த பாலம் வழியாக சென்று வருகின்றனர். அதேபோல் ஏரல் பஸ் நிலையம் மற்றும் கணபதிசமுத்திரம், ஆறுமுகமங்கலம் பகுதியில் இருந்து சிறுத்தொண்டநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகளும் இந்த பாலம் வழியாகத்தான் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததினால் பெரிய வாகனத்திற்கு வழி விடும் போது பைக் மற்றும் சைக்கிளில் வருபவர்கள் நிலைதடுமாறி 20 அடி பள்ளத்தில் உள்ள வடகால் வாய்க்காலில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே பெரிய வகையில் உயிர்சேதம் ஏதும் ஏற்படுவதற்குள் இந்த பாலத்தில் உடைந்துள்ள தடுப்பு சுவரை சீரமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: