அந்தியூர் அருகே அரசு மாதிரி பள்ளியில் வெளிமாநில நபர்களை தங்க வைக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை

அந்தியூர்: அந்தியூர் அருகே அரசு மாதிரி பள்ளியில் வெளிமாநில நபர்களை தங்க வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செல்லம்பாளையத்தில் அரசு மாதிரிப் பள்ளி உள்ளது. இங்கு வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த நபர்களை இப்பள்ளியில் தங்க வைக்க திட்ட இயக்குனர் பாலகணேஷ் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று காலை ஆய்வு செய்தனர்.இத் தகவல் செல்லம்பாளையம் மற்றும் மேலூர் பகுதியில் பரவியதால் 100க்கும் மேற்பட்ட மக்கள் பள்ளி முன்பு முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த பவானி டி.எஸ்பி. சேகர், அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி, அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் குமரவேல் ஆகியோர் ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் பள்ளி முன்பு முற்றுகையிடக்கூடாது.

அனைவரும் வீட்டுக்கு செல்லுங்கள் என அறிவுறுத்தினர். மக்கள் கலைந்து செல்லாததால் ஆத்திரமடைந்த போலீசார் அவர்களை விரட்ட முயன்றனர். பின்னர், வருவாய்த்துறை அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளிக்கு நோயாளிகளை அழைத்து வர போவதில்லை. வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள் மட்டுமே இங்கே அழைத்து வந்து தனிமைப்படுத்தப்படுவார்கள். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்களை பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: