சென்னையில் புயல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்று முதல் தனிக்கடைகள் திறக்க அனுமதி...பெரும் அச்சத்தில் சென்னைவாசிகள்

சென்னை: இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்து மே 3ம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக, அனைவரும் வீட்டிலேயே முடங்கினர். அத்தியாவசிய பணிகளை தவிர  மற்ற பணிகள் எதுவும் நடைபெறவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பஸ், ரயில், விமான சேவைகள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் இழுத்து மூடப்பட்டது. இதனால் பொதுமக்களின் பொருளாதார நிலை  மிகவும் மோசமானது. தினசரி கூலி வேலை செய்து சாப்பிடுபவர்கள், ஒருநாள் உணவுக்கே மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் இரண்டு வாரத்துக்கு அதாவது மே 17ம் தேதி வரை நீட்டித்து கடந்த வாரம் அறிவித்தது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் 4ம் தேதியில் இருந்து மே 17ம் தேதி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ்  குறைவாக உள்ள பகுதிகளில் அதாவது தடை செய்யப்பட்ட பகுதிகள் என்று அறிவிக்காத மற்ற பகுதிகளில் தனி கடைகள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், கட்டுமான  பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய கடைகள்  காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை செயல்படலாம் என்றும், மற்ற கடைகள் காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரை திறக்கலாம் என்றும்  அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று முன்தினம் முதல் சென்னையில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், இன்று முதல் தனிக்கடைகள் கட்டுப்பாடுடன் திறக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.  சென்னையில் அனைத்து தனிக்கடைகள் இயங்கலாம் எனவும், வணிக வளாகங்கள் மற்றும் மால்கள் திறக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏசி பொருத்தப்பட்ட கடைகள் செயல்படலாம், ஆனால் ஏசி.,யை  பயன்படுத்தக்கூடாது எனவும், ஏசி பயன்படுத்தவில்லை என்ற போஸ்டரை கடை முன் ஒட்ட வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு கட்டுப்பாடுகளை படிபடியாக தளர்த்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு 2-வது நாளாக நேற்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டது. தொடர்ந்து, கடைகள் திறக்க அனுமதி அளிப்பது கொரோனா வைரசுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பது போல் உள்ளது.

Related Stories: