கோரன்டைன் வார்டு அமைக்க எதிர்ப்பு: ஜீப்போடு கொளுத்தி விடுவதாக பெண் தாசில்தாருக்கு மிரட்டல்: பெரம்பலூர் அருகே 30 பேர் மீது வழக்கு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே பசும்பலூர் கிராமத்தில் அரசு மாணவர் விடுதியில் கோரன்டைன் வார்டு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜீப்போடு கொளுத்தி விடுவதாக பெண் தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 30பேர் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பசும்பலூரில் வி.களத்தூர் செல்லும் சாலையிலுள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் கோரன்டைன் வார்டு அமைக்க வேப்பந்தட்டை தாசில்தார் கவிதா தலைமையில் வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் நேற்றுமுன்தினம் இரவு ஏற்பாடு செய்தனர்.

தகவல் அறிந்த பசும்பலூர் கிராம மக்கள் 300 பேர் திரண்டு வந்து, கோரன்டைன் வார்டு அமைத்தால் தற்கொலை செய்து கொள்ள போவதாக பூச்சி மருந்து, மண்ணெண்ணெய் கேன்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தாசில்தார் கவிதாவை தரக்குறைவாக பேசியதோடு, ஜீப்போடு வைத்து கொளுத்தி விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தாசில்தார் கவிதா, விஏஓ ரெங்கராஜ் ஆகியோர் மாவட்ட கலெக்டர் சாந்தாவிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். இது குறித்து வி.களத்தூர் போலீசிலும் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீசார், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தது மற்றும் சமூக இடைவெளியை கடை பிடிக்காமல் ஒரே இடத்தில் 300 பேர் திரண்டதாக பசும்பலூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் உள்பட 30பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.   

Related Stories: