சொந்த ஊர் திரும்புவோர் தங்குவதற்கு மூங்கிலால் தனிக்குடிசை அமைப்பு: ஆதிவாசி கிராமத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கூடலூர்: கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ளது ஓட கொல்லி ஆதிவாசி கிராமம். இங்கு 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து வேலைக்காக வெளியூர் சென்றவர்கள் திரும்பி வர உள்ள நிலையில் அவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்காக கிராம மக்களே இணைந்து தனியாக குடிசை அமைத்து வருகின்றனர்.  ஏற்கனவே கிராமத்தில் வசிப்பவர்களின் இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தள்ளி தனியாக 10 பேர் தங்கும் அளவில் மூங்கிலால் குடிசை அமைக்கப்பட்டு வருகிறது.  இதுகுறித்து அங்குள்ள கிராம மக்கள் கூறுகையில், தங்களது கிராமத்தில் இருந்து இளைஞர்கள் மற்றும் திருமணமானவர்கள் என 10க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு  கூலி வேலைக்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சென்றனர். ஊர் திரும்புவதற்கு முன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால்  கிராமத்திற்கு வரமுடியாத நிலையில் அங்கேயே தங்கி உள்ளனர். தற்போது ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில், அவர்கள் ஊருக்கு திரும்பி வர முயற்சித்து வருகின்றனர். சுமார் மூன்று மாதங்களாக அவர்கள் ஊரில் இல்லாததால் அவர்களது பெற்றோர்கள் மனைவி மற்றும் குழந்தைகளும் தவிப்புடன் காத்திருக்கின்றனர். இதேபோல் அவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் குடும்பங்களுடன் சேர முடியாத சோகத்தில் உள்ளனர்.

பெரும்பாலும் எங்கள் இனத்தவர்கள்  வெளியூர்களில் சென்று குடும்பங்களை பிரிந்து அதிக நாட்கள் தங்குவது கிடையாது. வசதி இல்லாத நிலையிலும் குடும்பங்களை பிரிந்து வாழாமல் இருப்பதைக் கொண்டு  குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதே எங்களுடைய பாரம்பரியமாக உள்ளது. பிழைப்புக்காக வெளியூர் செல்பவர்களும் மாதம் ஒரு முறையாவது ஊருக்கு வந்து குடும்பத்துடன் தங்கி செல்வது வழக்கமாக உள்ளது.  இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஊருக்கு திரும்பி வரும் எங்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஊரை ஒட்டி தனிமைப்படுத்தி வைப்பதற்காக நாங்களே சொந்தமாக மூங்கிலால் ஆன இந்த குடிசை அமைத்து வருகிறோம். நோய் தொற்று எதுவும் அவர்களால் கிராம மக்களுக்கு ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் ஊருக்கு வந்தவுடன், குறிப்பிட்ட நாட்கள் வரை அந்த குடிசையில் தனியாக வசிக்கும் வகையில், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளது. எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கிராமத்திற்கு திரும்புவதற்கு மாவட்ட நிர்வாகமும் அரசும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து எங்களுக்கு உதவ வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: