துணிச்சலையும், தியாகத்தையும் மறக்க மாட்டோம்; காஷ்மீரில் 5 வீரர்கள் மரணமடைந்தது வேதனையளிக்கிறது... ராஜ்நாத் சிங் டுவிட்

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாராவில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென  துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து பதிலடி தரும்வகையில் பாதுகாப்பு படையினரும் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், கர்னல், ராணுவ உயரதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் வீரமரணமடைந்துள்ளனர். பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஹந்த்வாராவின் சங்கிமுல்லா பகுதியில் நுழைந்து குடிமக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தியபின் தீவிரவாதிகளின் மீதான தாக்குதலைத் தொடங்கியதாக இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தற்கு பல்வேறு தரப்பிரனர் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் 5 வீரர்கள் மரணமடைந்தது வேதனையளிக்கிறது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். ராணுவ வீரர்களின் துணிச்சலையும், தியாகத்தையும் ஒரு போதும் மறக்க மாட்டோம் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: