மலேசியாவில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர மத்திய அமைச்சருடன் தயாநிதி மாறன் பேச்சு: நடவடிக்கை எடுப்பதாக உறுதி

சென்னை: மலேசியாவில் தவிக்கும் தமிழர்களை திரும்ப அழைத்து வருவது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொலைபேசி மூலம் வலியுறுத்தியதை தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மலேசிய நாட்டில் பணிபுரிவதற்காக, தமிழகத்திலிருந்து சென்றுள்ள தமிழர்கள் கொரோனா நோய் தொற்று காலத்தில் ஊரடங்கின் காரணமாக தங்களது பணி உரிமை மற்றும் தங்கும் உரிமையை நீட்டிக்க இயலாத நிலையில் உள்ளனர். விமான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால், அந்நாட்டில் தங்கவும் முடியாமல், தாயகம் திரும்பவும் முடியாமல் தவிக்கும் நிலையில் உள்ளனர்.

மேலும் விசா காலம் முடிந்தபடியால் மலேசிய காவல் துறையினர் தொடர்ந்து துன்புறுத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு மலேசியாவில் அவதியுறும் தமிழர்களின் நிலை குறித்து விளக்கி கூறினார். மத்திய அமைச்சரும், மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் வாயிலாக பாதிக்கப்பட்டவர்களை பரிவோடு நடத்திட மலேசிய அரசைக் கேட்டுக் கொள்வதாகவும், அவர்களை முன்னுரிமை அடிப்படையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் பாதுகாப்பாக இந்தியா திரும்ப அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கூறினார்.

இந்த முயற்சிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Related Stories: