நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் ஏற்றம், இறக்கம் இனி 5 காசு தான்: என்இசிசி திடீர் அறிவிப்பு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில், இனி ஏற்றமும், இறக்கமும் 5 காசு தான் என என்இசிசி அறிவித்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் நேற்று என்சிசி 5 காசுகள் உயர்த்தியது. இதன்படி, ஒரு முட்டையின் விலை 320 காசில் இருந்து  325 காசாக உயர்ந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தியாகும் முட்டைக்கு கடந்த 35 ஆண்டுக்கு மேலாக என்இசிசி விலை நிர்ணயம் செய்து வருகிறது. ஆனால் பண்ணையாளர்கள் இடையே சமீபகாலமாக ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதலால், என்இசிசி நிர்ணயம் செய்யும் விலையை இருதரப்பினரும் கடும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.  ஊரடங்கு நேரத்தில் முட்டை விலையை என்இசிசி இஷ்டத்துக்கு உயர்த்தியது. இந்த நிலையில் கடந்த வாரம்  2 நாளில் 130 காசுகள் குறைக்கப்பட்டது.

இது விற்பனையாளர்களுக்கும், பண்ணையாளர்களுக்கும் இடையே பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. இந்நிலையில் என்இசிசி சேர்மன் டாக்டர் செல்வராஜ் பெயரில், பொது மேலாளர் பாலசுப்பிரமணியம் வாட்ஸ் அப் குரூப்களில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில், இனிவரும் காலங்களில் தினசரி முட்டை விலை உயர்வு மற்றும் இறக்கம் இரண்டுமே சாதாரணமாக 5 காசுக்கு மேல் இருக்காது. ஆனால் அவசர காலங்களில் இது மாறுபடும். இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது என கூறியிருந்தார். இதன்படி நேற்று காலை முட்டை விலையில் 5 காசு உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் விலை 325 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் பண்ணைகளில் ஒரு முட்டை 280 காசுக்கு வியாபாரிகளால் வாங்கி செல்லப்படுகிறது.

Related Stories: