நெல்லையில் சுடச் சுட தயாராகும் முருக்கு, அதிரசம் வாங்க பொதுமக்கள் ஆர்வம்: தடை உத்தரவு காலத்தில் வருமானம் ஈட்டும் பெண்கள்

நெல்லை: நெல்லை பகுதிகளில் 144 தடை உத்தரவால் சுவீட் ஸ்டால்கள் மூடப்பட்டிருப்பதால் முருக்கு, அதிரசம், தட்டை உள்ளிட்ட நொறுக்கு தீனிகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நாளை 3ம் தேதிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தி இருந்தது. தற்போது மேலும் 14 நாட்கள் மே 17ம்தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று அறிவித்துள்ளது. இதையடுத்து அனைத்து சுவீட் ஸ்டால்கள், டீக்கடைகள், ஸ்நாக்ஸ் கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் அரசு போக்குவரத்து கழகம், தனியார் பஸ்கள், திரையரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டில் தங்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனால் வீட்டில் உள்ள சிறுவர்-சிறுமிகளுக்கு தேவையான நொறுக்கு தீனிகள் கிடைப்பது அரிதாக இருந்தது. இந்நிலையில் நெல்லை மாநகரில் பாளை,, டவுன் பகுதிகளில் முருக்கு, அதிரசம், தட்டை, சீடை, அச்சு முறுக்கு, முந்தரிகொத்து உள்ளிட்ட நொருக்கு தீனிகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு பணி செய்யும் பெண்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணி செய்து வருகின்றனர். காலை 8 மணிக்கு துவங்கும் முருக்கு, அதிரசம் தயாரிக்கும் பணியானது நண்பகல் 12 மணிவரை நடக்கிறது. 144 தடை உத்தரவால் வீட்டில் ஆண்கள் வேலையின்றி தவிக்கும் நேரத்தில் பெண்கள் தினமும் ரூ.200 வரை சம்பாதிக்கும் வகையில் முருக்கு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சுவீட் ஸ்டால்கள் மூடப்பட்டிருந்த நிலையில் இங்கு தயாரிக்கப்படும் முருக்கு, அதிரசம், அச்சு முருக்கு, தட்டை வகைகள் சுடச் சுட கிடைப்பதால் பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

ஆனால் 144 தடை உத்தரவுக்கு முன்பிருந்த விற்பனை தற்போது இல்லை என முருக்கு சுற்றும் பெண்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பாளையில் முருக்கு சுற்றும் தொழிலை நடத்தி வரும் ராஜலட்சுமி தெரிவிக்கையில், ஊரடங்கால் தொழிலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திருமணம், சடங்கு உள்ளிட்ட சுபகாரியங்கள் சிம்பிளாக நடத்தப்படுவதாலும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படாததாலும் ஆடர்கள் திரும்ப பெறப்பட்டன. தற்போது சமூக இடைவெளியை கடைபிடித்து குறிப்பிட்ட 5 மணி நேரம் வரை பணியாளர்கள் மாஸ்க் அணிந்து முருக்கு உள்ளிட்ட திண்பண்டங்களை தயாரித்து வருகின்றனர். சுடச் சுட கிடைப்பதால் பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். முருக்கு ரூ.3, அச்சு முருக்கு, தட்டை, அதிரசம் ரூ.5க்கும் விற்பனை செய்கிறோம். இதன் மூலம் வேலை பார்க்கும் பெண்களுக்கும் தற்போது தினமும் ரூ.200 சம்பளம் கிடைப்பது அவர்களுக்கு உதவியாக உள்ளது என்றார்.

Related Stories: