கடைசி நோயாளியும் டிஸ்சார்ஜ் கொரோனா இல்லாத மாவட்டமானது தூத்துக்குடி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் தூத்துக்குடி கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 27 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இதில் போல்டன்புரம் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி பலியானார்.  தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தினர் 5 பேரும்,  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 20 பேரும் என மொத்தம் 25 பேர், அடுத்தடுத்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

இதனால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பசுவந்தனையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை மட்டுமே கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவரும் படிப்படியாக குணமடைந்து நேற்று  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் முற்றிலும் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் கடைசியாக கடந்த 20ம் தேதி தான் கடைசியாக பசுவந்தனை ஆசிரியைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு யாருக்கும் கொரோனா ெதாற்று இல்லை.  புதிய தொற்று இல்லாத நிலையில் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் படிப்படியாக ஊரடங்கு உத்தரவை தளர்த்தலாம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

Related Stories: