சங்கரன்கோவிலில் விசைத்தறிகள் முடங்கியதால் தினமும் ரூ.1 கோடி வர்த்தகம் பாதிப்பு: 20 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி பரிதவிப்பு

சங்கரன்கோவில்: ஊரடங்கால்  சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விசைத்தறி தொழில்கள் முடங்கியதால் 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பல கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்பால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில்,  சுப்புலாபுரம்,  புளியங்குடி, ஆகிய பகுதிகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இங்கு சேலை,  கைலி, துண்டு,  டர்க்கி டவல் உள்ளிட்ட துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது.  விசைத்தறி தொழிலில் நேரடியாக ஈடுபட்டுள்ள  தொழிலாளர்களும்,  விசைத்தறியோடு  தொடர்புடைய பாவு போடுதல்,  சாயம் போடுதல், உள்ளிட்ட பணிகளில் உள்ளவர்கள்  சேர்த்து சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.  கொரோனா  வைரஸ் பரவாமலிருக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல்  நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி தொழில் அடியோடு முடங்கிப் போனது. ஏற்கெனவே உற்பத்தி செய்து வைத்திருந்த பொருட்களை அனுப்ப முடியாமல் விசைத்தறி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த 38 நாட்களாக விசைத்தறி உற்பத்தி நிறுத்தப்பட்டதால் நாளொன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வீதம் 38 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் தறி வைத்து உற்பத்தி செய்து கொடுத்தால் மட்டுமே வரும் தொகையை நம்பி வாழ்ந்த விசைத்தறி தொழிலாளர்கள்  இன்று விசைத்தறி தொழில் அடியோடு முடங்கிப் போய் நிற்பதால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

இதுகுறித்து சங்கரன்கோவில் மாஸ்டர் அசோசியேசன் சங்க செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழகத்தில் விசைத்தறி உற்பத்தியில் சங்கரன்கோவில்  மிக முக்கியமானதாகும். தற்போது ஊரடங்கால்  விசைத்தறி தொழில் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. தமிழக அரசு நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று  தெரிவித்துள்ளது. சங்கரன்கோவில் சுற்றுப்பகுதியில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் 50 சதவீதம் மட்டுமே நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அதிலும் சிலர் தங்களது உறுப்பினர் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் உள்ளனர். இதனால் தற்போது 30 சதவீதம் தொழிலாளர்களுக்கு மட்டுமே நிவாரண தொகை கிடைக்கும் சூழல் உள்ளது.

சங்கரன்கோவில் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தமிழக அரசின் நல வாரியம் மூலம் வழங்கப்படும் நிவாரணத்திற்கு விசைத்தறி தொழிலாளர்கள் கணக்கெடுப்பின் போது 1200 தொழிலாளர்கள் மட்டுமே இருப்பதாக தகவல் அளித்துள்ளனர். எனவே அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

Related Stories: