ஓட்டல்களுக்கு 100 கோடி வருவாய் இழப்பு: 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

சேலம்: தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஓட்டல்களில், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஊரடங்கால் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதால் இதை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து, வருமானமின்றி கஷ்டப்படுகின்றனர்.  இது குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் பழனிசாமி கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஓட்டல் சங்கங்களில் பதிவு செய்த ஓட்டல்கள் 10 ஆயிரம் உள்ளன. இந்த ஓட்டல்களில் 3.50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இதைதவிர சங்கத்தில் பதிவு செய்யாத 10,000 ஓட்டல்கள் உள்ளன. மொத்தமாக 20,000க்கும் மேற்பட்ட ஓட்டல்களும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் ஓட்டல் தொழிலை நம்பியுள்ளனர்.

 ஓட்டல் தொழிலாளிக்கு வேலையை பொறுத்து தினசரி ₹400 முதல் ₹800 வரை கூலி வழங்கப்படும். சில ஓட்டல்களில் மாதச் சம்பளம் தரப்படுகிறது. ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் ஓட்டல் மூடப்பட்டுள்ளதால்,  ஓட்டல் தொழிலாளர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை இழந்து, வருமானமின்றி தவிக்கின்றனர். ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதால் உரிமையாளர்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் 100 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மூலம் அரசுக்கும் பல லட்சம் வருவாய் இழப்பு நடந்துள்ளது. ஓட்டல் தொழிலை நம்பியுள்ள இலை,காய்கறி,மளிகைப்பொருட்கள்,இறைச்சி, அரிசி, தேங்காய், எண்ணெய் என நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளனர்.

ஓட்டல் மூலம் இவர்களுக்கு தினசரி கிடைத்து வந்த வருமானம் போய்விட்டது. வங்கிக்கடன் செலுத்த முடியவில்லை என்றார்.

மின்கட்டணம் ரீடிங் எடுக்க கோரிக்கை

மின்சார வாரியம் ரீடிங் எடுக்க முடியாததால் கடந்த மாதம் மின்கட்டணத்தையே நடப்பு மாதத்திற்கு செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்த நிறுவனங்கள் எதுவும் செயல்படவில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில் கடந்த மாதம் மின்கட்டணத்தை எப்படி நடப்பு மாதத்திற்கு செலுத்த முடியும். எனவே மின்வாரியம் ரீடிங் எடுத்து, அதற்குரிய தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் ஓட்டல் உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: