இனிமேலும் பொறுக்க முடியாது; மத்திய ஜல் சக்தி துறையின் கீழ் காவிரி ஆணையத்தை கொண்டு வந்ததற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்துள்ள முடிவினை கைவிட வேண்டும் என்று தமிழக அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என மு.க.ஸ்டாலின்  வலியுறுத்தியுள்ளார். தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் நதிநீர் பங்கீடு விவகாரத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 18ந்தேதி  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசின் துணையோடு அதிகாரமற்ற வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது மத்திய பா.ஜ.க அரசு. மேலும், அ.தி.மு.க அரசு, காவிரி மேலாண்மை  ஆணையத்தின் கூட்டத்தை கூட்டுவதற்கோ உரிய தண்ணீரைப் பெறுவதற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தனித்தலைவரை நியமிக்கக்கோரி தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசிடம் வலியுறுத்தியும் அதை கண்டுகொள்ளாத மோடி அரசு, மத்திய நீர்வளத்துறை ஆணைய தலைவரையே காவிரி மேலாண்மை  ஆணையத் தலைவராக நியமினம் செய்து கவனித்து வந்தது. இந்நிலையில், தன்னிச்சையாக செயல்படும் அமைப்பாக அறிவிக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை, மத்திய அரசின் நீர்வளத்துறையான ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு  வந்து, அதிகாரமற்ற அமைப்பாக மாற்றி, அதன் செயல்பாடுகளை முடக்கி உள்ளது. இதனால், காவிரி மேலாண்மை ஆணையம் தன்னிச்சையான ஆணையம் என்ற சிறப்பை இழந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம்  இழந்து தவிக்கும் நிலையில், இத்தகைய அரசாணையை வெளியிட்டு தமிழக மக்களை வஞ்சித்துள்ளது.

இந்நிலையில், இந்த அரசிதழ் உடனடியாக திரும்பப் பெறப்படவில்லை என்றால் மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளைக் காவு கொடுத்து விட்டு, இந்த “உரிமைப் பறிப்பு வைபவங்களை” எல்லாம் ஒய்யாரமாக அனுமதித்து - மத்திய பா.ஜ.க. அரசுக்குப் பவ்வியமாக - பக்கபலமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. அரசு. வெறும் “எலும்புக்கூடு” அமைப்பான காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் உள்ள காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக்குழு இதுவரை 20-க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தி விட்டது. ஆனால், இந்தக் குழுவின் எந்த முடிவையும் கர்நாடக அரசும் மதிக்கவில்லை; உச்சநீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியின்படி மத்திய பா.ஜ.க. அரசும் உரிய அழுத்தம் கொடுத்து அவற்றை நிறைவேற்ற முன்வரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த அடாவடியான செயல், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைத் தட்டிப் பறிக்கும் செயல். காவிரி நீரை நம்பியிருக்கும் வேளாண்மையை அடியோடு வேரறுக்கும் மனிதாபிமானமற்ற செயல். தமிழகத்தின் ஜீவாதார உரிமையை ஆணிவேரோடு பிடுங்கி எறியும் கருணையற்ற, கண்டனத்திற்குரிய செயல் என்று தெரிவித்துக் கொள்கிறேன். காவிரி நதிநீர் உரிமை பறிபோவதை இனிமேலும் தமிழகம் பொறுத்துக் கொள்ள முடியாது.

இந்த அரசிதழ் திரும்பப் பெறப்படவில்லை என்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும், விவசாயப் பேரமைப்புகளையும் ஒன்றுசேர்த்து மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்துள்ள முடிவினை கைவிட வேண்டும் என்று அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: