திருச்சுழி அருகே நெகிழ்ச்சி சிலம்பக்கனவுக்காக சேர்த்த பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுவன்

திருச்சுழி :  திருச்சுழி அருகே சிலம்பப் பொருட்கள் வாங்குவதற்காக நீண்ட நாட்களாக சேமித்து வைத்த 825 ரூபாயை கொரோனா நிதிக்காக பள்ளிச்சிறுவன் வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த பாண்டியன். இவர் வாடகை கார் ஓட்டும் தொழிலாளி. இவருக்கு முருகலட்சுமி என்ற மனைவி, பிரியதர்ஷினி (12), பாலாஜி (8) என இரு குழந்தைகள் உள்ளனர். அரசு மேல்நிலைப்பள்ளியில் பிரியர்தஷினி ஏழாம் வகுப்பும், பாலாஜி மூன்றாம் வகுப்பும் படிக்கின்றார்.

இருவரும் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை குவித்துள்ளனர். ஏழ்மையான குடும்பம் என்பதால் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்,  ஊரடங்கை அறிந்த மாணவன் பாலாஜி, சிலம்பம் போட்டிகளில் பயிற்சி பெறுவதற்காக மான் கொம்பு, சுருள், கட்டைகால் வாங்குவதற்காக நீண்ட நாட்களாக உண்டியலில் சேர்த்து வைத்த சிறுசேமிப்பு பணமான 825 ரூபாயை திருச்சுழி கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசியிடம்  ஒப்படைத்தார்.  நீண்ட நாள் கனவை நிராகரித்து  நிவராண நிதிக்காக சேமிப்பு பணத்தை ஒப்படைத்த சிறுவனுக்கும், அவரது தந்தைக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னாடை போர்த்தி  கவுரவித்தார்.

Related Stories: