34 ஆண்டு நில ஊழல் வழக்கில் பாக். முன்னாள் பிரதமர் ஷெரீப்புக்கு கைது வாரன்ட்: தேசிய பொறுப்புடைமை அமைப்பு அதிரடி

லாகூர்: பாகிஸ்தானில் 34 ஆண்டுக்கால நில ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக பாகிஸ்தான் ஊழல் தடுப்பு அமைப்பு கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவரும் இந்நாட்டின் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், முன்பு பஞ்சாப் மாகாண முதல்வராக இருந்தார். அப்போது, லாகூரின் முக்கிய பகுதியில் உள்ள 6.75 ஏக்கர் நிலத்தை சட்ட விரோதமாக ஜாங் குழுமத்தின் தலைமை பத்திரிகை ஆசிரியர் மிர் ஷாகிலுர் ரஹ்மானுக்கு 1986ம் ஆண்டில் குத்தகைக்கு விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ரஹ்மான் கடந்த 12ம் தேதி ஊழல் தடுப்பு அமைப்பான தேசிய பொறுப்புடைமை அமைப்பினரால் (என்ஏபி) கைது செய்யப்பட்டு, இன்று வரை என்ஏபி. தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ள நவாஸ் இந்த நில ஊழல் வழக்கு தொடர்பாக என்ஏபி அலுவலகத்தில் மார்ச் 20, 31 தேதிகளில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, முறையே மார்ச் 15, 27 தேதிகளில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவரது தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதையடுத்து, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால் அவரை குற்றவாளியாக அறிவிக்கக் கோரி பொறுப்புடைமை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் நில ஊழல் வழக்கில் அவரை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்தது.

Related Stories: